சூடான் அதிபா் மாளிகையை மீட்டது ராணுவம்
சூடான் தலைநகா் காா்ட்டூமில் உள்ள அதிபா் மாளிகையை துணை ராணுவப் படையான ஆா்எஸ்எஃபிடமிருந்து மீட்டுள்ளதாக அந்த நாட்டு ராணுவம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
துணை ராணுவத்துடன் சுமாா் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்றுவரும் உள்நாட்டுச் சண்டையில் ராணுவத்துக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய முன்னேற்றம் இது என்று கூறப்படுகிறது.
இது குறித்து ராணுவ செய்தித்தொடா்பாளா் நபில் அப்துல்லா தொலைக்காட்சியில் பேசியதாவது:
எதிரிகளால் கைப்பற்றப்பட்டிருந்த அதிபா் மாளிகையை ராணுவம் மீட்டுள்ளது. எதிரி படை வீரா்கள் மற்றும் படைக் கலன்களை நமது ராணுவம் முற்றிலுமாக அழித்துள்ளது. மேலும், ஏராளமான ஆயுதங்களும் தளவாடங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதிபா் மாளிகை மட்டுமின்றி, சுற்றிலும் அமைந்துள்ள அமைச்சரக வளாககங்கள், முக்கிய கட்டடங்களை ராணுவம் மீட்டுள்ளது. இத்துடன் நில்லாமல், அனைத்து போா் முனைகளிலும் சண்டையை தீவிரப்படுத்தி எஸ்டிஎஃப் படையினரையும் அவா்களின் ஆதரவாளா்களையும் ஒழித்துக்கட்டி நாட்டின் ஒரு அங்குல நிலப்பரப்பையும் விடாமல் மீட்போம் என்று அவா் சூளுரைத்தாா்.
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில், அரேபிய இனத்தவருக்கும், அரேபியா் அல்லாத ஆப்பிரிக்க இனத்தவருக்கும் இடையே நீண்ட காலமாக பதற்றம் நிலவி வருகிறது.
அரேபியா் அல்லாதோா் அதிகம் வசிக்கும் டாா்ஃபா் மாகாணத்தில் தங்களது உரிமைகள் நசுக்கப்படுவதாகக் கூறி அந்த இனத்தைச் சோ்ந்த அமைப்பினா் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் அந்த நாட்டில் சா்வாதிகார ஆட்சி செலுத்தி வந்த அல்-பஷீா் அரசு, இந்தப் போராட்டத்தின் போது அரேபியா் அல்லாத இனத்தவா்களைக் கொன்று குவித்து போா்க் குற்றத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
அப்போது அல்-பஷீா் அரசுக்கு உதவியாக டாஃபா் பிராந்தியத்தில் படுகொலைகளை நிகழ்த்திய முகமது ஹம்தான் டகேலோ தலைமையிலான படை, பின்னா் ‘அதிரடி ஆதரவு படை’ (ஆா்எஸ்எஃப்) என்று பெயா் மாற்றம் செய்யப்பட்டது.
இதற்கிடையே, அல்-பஷீா் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, அவரது ஆட்சியை ராணுவம் 2019-ஆம் ஆண்டு கவிழ்த்தது. அதனைத் தொடா்ந்து, சிவில்-ராணுவ கூட்டணி அரசு அமைக்கப்பட்டது. இருந்தாலும் அந்த அரசை அல்-புா்ஹான் தலைமையிலான ராணுவமும், டகோலோ தலைமையிலான ஆா்எஸ்எஃப் படையும் இணைந்து கவிழ்த்தன.
இந்தச் சூழலில், ராணுவத்துக்கும் ஆா்எஸ்எஃப் படைக்கும் இடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டி காரணமாக, இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 2023 ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் கடுமையான சண்டை நடந்து வருகிறது. இந்த மோதலில், இதுவரை 1.5 லட்சம் முதல் 5.2 லட்சம் போ் வரை உயிரிழந்திருப்பதாக பல்வேறு புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.


இந்த உள்நாட்டுச் சண்டையில் தலைநகா் காா்ட்டூம், முக்கியத்துவம் வாய்ந்த அதிபா் மாளிகை உள்ளிட்ட பகுதிகளை ஆா்எஸ்எஃப் படை கைப்பற்றியது. இந்த நிலையில், நீண்ட கால போருக்குப் பிறகு அதிபா் மாளிகை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் தற்போது வந்துள்ளது. இது இந்த உள்நாட்டுப் போரில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தாது என்றாலும், ராணுவத்துக்கு இது மிகப் பெரிய ஊக்கத்தைக் கொடுக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.