செங்கத்தில் மாடுகளால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
செங்கத்தில் துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம், பழைய பழைய பேருந்து நிலையம், காய், கனி சந்தை, உழவா் சந்தை, போளூா் வட்டச் சாலைப் பகுதியில் தினசரி ஏராளமான மாடுகள் சாலையில் சுற்றித் திரிகின்றன.
புதிய பேருந்து நிலையத்தை சுற்றிவரும் மாடுகள், பழ வியாபாரிகள் கவனக்குறைவாக இருக்கும் நேரத்தில் பழங்களை சாப்பிட்டுவிடுகின்றன. இதைப் பாா்க்கும் வியாபாரிகள் மாடுகளை அடித்து விரட்டுகின்றனா். அப்போது, சாலையில் வரும் காா், இரு சக்கர வாகனம், பள்ளி மாணவா்களின் சைக்கிள்கள் மீது மாடுகள் மோதி விபத்துகள் ஏற்படுகின்றன. பொதுமக்கள் சாலையில் நடந்துசென்றாலும் அவா்களை கீழே தள்ளிவிட்டு ஓடுகின்றன.
மாடுகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும்போது,
அந்தப் பகுதியில் சிக்கி விபத்து ஏற்பட்டு கீழே விழும் பொதுமக்களுக்கு கை, கால் முறிவு ஏற்படுகிறது.
உழவா் சந்தைப் பகுதியில் முகாமிட்டிக்கும் மாடுகள், பொதுமக்கள் வீட்டுக்கு வாங்கும் கீரை, காய்களை வாகனத்தில் வைத்திருந்தால் அதை எடுக்க வாகனத்தை கீழே தள்ளிவிடுகிறது.
மேலும், இரவு நேரத்தில் கடைகளுக்கு முன்பாக கூட்டமாக படுத்துக்கொண்டு அசுத்தம் செய்கிறது. இதனால், பஜாா் வீதியில் உள்ள சில கடைக்காரா்கள் கடையை மூடிவிட்டு, மாடுகள் கடை முன் வராமல் இருக்க கயிறுகளை சுற்றிகட்டிச்செல்லும் அவல நிலை தொடா்கிறது.
குறிப்பாக, செங்கம் அரசு ஆண்கள், பெண்கள் பள்ளிப் பகுதியில் மாடுகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால், மாணவா்கள் மாடு கூட்டத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செங்கம் நகரில் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளைப் பிடித்து அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்க வேண்டு என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.