3 ஆண்டுகளாக முடங்கியுள்ள சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம்! நிறைவேற்ற புதுகை மக்கள் ...
`செந்தில் பாலாஜியைப் பார்த்து பயப்படுவதற்கு அவர் என்ன ஆரியப்படை வீரரா?' - சீமான் காட்டம்
திருச்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் , ‘அண்ணனுடன் ஆயிரம் பேர்’ என்கிற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை தமிழகத்தில் கொட்டுவது கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு முறையும் அதற்காக போராடி நாங்கள் தடுத்து வருகிறோம்.
புகார் அளித்தாலும் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கேராளவில் தமிழக கழிவுகளை எடுத்து சென்று கொட்டினால் அந்த மாநிலத்தின் மக்கள் அதை எதிர்ப்பார்கள். தமிழகத்தின் வளங்களை கொள்ளையடித்துச் சென்று விட்டு கழிவுகளை இங்கு வந்து கொட்டுகிறார்கள். இந்த பிரச்னை இந்த ஆட்சியில் மட்டுமல்ல, சென்ற ஆட்சியிலிருந்தே நடக்கிறது. இது குறித்து யாரும் கண்டுகொள்வதில்லை. தி.மு.க ஆட்சியின் சாதனைகள் என்ன என்பதை எப்படி பரணி பாடப்போகிறார்கள் என்பதை கேட்போம். வெள்ள பாதிப்புக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. நீதிமன்ற வாயிலில் கொலை, மருத்துவமனைக்குள் கொலை, பள்ளிக்குள் கொலை என பல இடங்களில் கொலை நடக்கிறது. ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மக்களை வீதியில் போராட வைத்துவிட்டு சிறந்த ஆட்சி தருகிறோம் என்கிறார்கள். போராட்டங்களை எதிர்கொள்ள துணிவு இல்லாத ஆட்சியாளர்களாக இந்த ஆட்சியாளர்கள் உள்ளார்கள். சென்னை திருப்போரூர் முருகன் கோயிலில் உண்டியலில் தவறுதலாக விழுந்த ஐபோனை திருப்பி தர முடியாது என இந்து சமய அறநிலைத்துறை சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. ஒருவேளை உண்டியலில் வெடிகுண்டை தூக்கிப் போட்டு இருந்தால் என்ன செய்திருப்பார்கள்?.
நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள த.வெ.க கட்சி காரணமாகவே நீங்கள் ஆயிரம் இளைஞர்களை சந்திக்கும் நிகழ்வுகளை நடத்துகிறீர்களா? என்று கேட்கிறீர்கள். ஆயிரம் இருந்தாலும் நடிகர் விஜய் எனது தம்பி. அவரை இதில் இழுத்து விடாதீர்கள். ஒன்று புரிந்துக் கொள்ளுங்கள். தி.மு.க-தான் எனது எதிரி. இஸ்லாமியருடைய ஓட்டுகளை பொறுக்குவதற்காகவே நாங்கள் பாட்ஷாவிற்கு ஆதரவாக பேசுகிறோம் என்று அண்ணாமலை கூறுகிறார். அவர் யாருடைய ஓட்டை பொறுக்குவதற்காக கோயம்புத்தூரில் பேரணி நடத்தினார்?. இஸ்லாமியர்கள் ஒருபோதும் எனக்கு வாக்களித்ததில்லை.. அவர்கள் வாக்களிப்பார்கள் என்பதற்காக நான் அவர்களுக்கு ஆதரவாக பேசுவதில்லை. எனக்கு உடன்பிறந்தார்கள் என்ற எண்ணத்திலேயே அவர்களுடன் உறவு பாராட்டுகிறேன். அவர்களுடைய ஐந்து கடமைகளில் ஆறாவது கடமையாக, தி.மு.க-வுக்கு வாக்களிப்பதையே தீர்மானமாக வைத்திருக்கின்றனர். அவர்களது இறைத்தூதரே வந்து சொன்னால் கூட அவர்கள் தி.மு.க-விற்கு வாக்கு செலுத்துவதை விட மாட்டார்கள். ஈரோடு இடைத்தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவோம். தனித்து போட்டியிடுவோம். தி.மு.க சார்பில் அங்கு இடைத்தேர்தலில் பணியாற்றக்கூடிய செந்தில் பாலாஜியை பார்த்து நாங்கள் பயப்படுவதற்கு அவர் என்ன ஆரியப்படை வீரரா?. பணம் கொடுத்தால் தான் தி.மு.க-வினர் தேர்தல் வேலைகளை செய்வார்கள். அப்படி, இருக்கையில் நாங்கள் ஏன் அவரைப் பார்த்து பயப்பட வேண்டும்?” என்றார்.