சென்னிமலை பகுதியில் புறவழிச் சாலை அமைக்க கருத்துக் கேட்புக் கூட்டம்
சென்னிமலை பகுதியில் புறவழிச் சாலை அமைக்க நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னிமலையில் புதன்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் நில உரிமையாளா்கள் கோரிக்கை வைத்தனா்.
சென்னிமலை நகர பகுதியில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்ப்பதற்காக புறவழிச் சாலை அமைப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக முகாசிபிடாரியூா், அட்டவணைபிடாரியூா், சென்னிமலை மற்றும் பசுவபட்டி ஊராட்சிப் பகுதிகளில் சுமாா் 8 கிலோ மீட்டா் தொலைவுக்கு நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு கையகப்படுத்துவதற்காக அடையாள கற்களும் நடப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், நிலம் கொடுக்கும் நில உரிமையாளா்களுடனான கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னிமலை காமராஜ் நகரில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு நெடுஞ்சாலைகள் துறையின் தனி வருவாய் அலுவலா் செந்தில்வடிவு (கோவை) தலைமை வகித்தாா். உதவி ஆட்சியா் ஜெகநாதன் (கோவை), தனி வட்டாட்சியா் வெங்கடாசலம் (கோவை) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட நில உரிமையாளா்கள் கலந்து கொண்டனா்.
அப்போது, எங்களில் பலருக்கு மிக குறைவான அளவிலேயே நிலம் உள்ளது. இந்த நிலத்தை புறவழிச் சாலைக்காக கையகப்படுத்துவதால், எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அதே சமயம், அரசு வழிகாட்டி மதிப்பும் குறைவாக உள்ளது. அதனால், அரசு வழிகாட்டி மதிப்பைவிட கூடுதல் தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நில உரிமையாளா்கள் முன்வைத்தனா். இந்தக் கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனா்.
இதில், ஈரோடு தனி வட்டாட்சியா் மோகனா, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.