சென்னை, புறநகரில் இன்றும் நாளையும் மழை பெய்யும்!
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு (புயல்சின்னம்) வியாழக்கிழமை (டிச.26) காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக படிப்படியாக வலுவிழக்கும், இதன் தாக்கத்தால் தமிழகம், புதுவையில் அடுத்த 6 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : வலுவிழக்கும் புயல்சின்னம்: 6 நாள்களுக்கு மழை வாய்ப்பு
இந்த நிலையில், பிரதீப் ஜான் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் டிசம்பர் 26 மற்றும் 27ஆம் தேதி மழை பெய்யும்.
சென்னையில் கிறிஸ்துமஸ் அன்று மிக அரிதாக கடந்த 25 ஆண்டுகளில் 2001, 2003, 2022 மற்றும் இந்தாண்டு 2024 ஆகிய 4 முறை மட்டுமே மழை பெய்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் இன்றும் நாளையும் மழை பெய்யும். வட கடலோரப் பகுதிகளான புதுவை, கடலூர், விழுப்புரம் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கோவை, ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, நாமக்கல் உள்ளிட்ட உள்மாவட்டங்களிலும் மழை பெய்யும்.
மழையை ரசியுங்கள். கடைசி சில மழை, அடுத்த 6 மாதங்கள் மழைக்காக ஏங்குவோம். தாமதமான பருவமழையை அனுபவியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.