சென்னையில் 10 ஆண்டுகளில் கல்லூரி மாணவா்கள் மீது 231 வழக்குகள் பதிவு
சென்னை: பைக்கில் போதை பொருள் சப்ளை... மடக்கி பிடித்த போலீஸார்.. கும்பலில் 4 பேர் கைது!
சென்னை முத்தியால்பேட்டைபகுதியில் போதை பொருள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்அடிப்படையில் முத்தியால்பேட்டை, பழைய ஜெயில் ரோடு, தையப்பன் தெரு சந்திப்பு பகுதியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த இளைஞர்களை போலீஸார் மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் போதைப் பொருள் இருந்தது. இதையடுத்து அவர்களை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
விசாரணையில் ஒருவரின் பெயர் முகமது மஸ்தான் என்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. இன்னொருவரின் பெயர் சதாம் செரிப், கொடுங்கையூர் எனத் தெரியவந்தது.
இவர்களிடமிருந்து 50 கிராம் எடையுள்ள போதை பொருள், ஐ போன், பைக் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் இவர்களுக்கு யார் போதை பொருள் சப்ளை செய்கிறார்கள் என விசாரித்தபோது பெரம்பூரைச் சேர்ந்த அப்சல் அகமது குறித்த தகவல் தெரியவந்தது. இதையடுத்து அப்சல் அகமதுவிடம் போலீஸார் விசாரித்தனர்.
விசாரணையில் அவரிடம் 5 கிராம் போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் மூன்று பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 55 கிராம் எடையுள்ள போதை பொருள், 3 செல்போன்கள், ஒரு பைக் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இவர்கள் மூன்று பேரும் அளித்த தகவலின்படி திருவல்லிக்கேணியைச் சேர்ந்த திவாலன் முகமது என்பவரை போலீஸார் தேடி வந்தனர். அவரையும் போலீஸார் கைது செய்து திவான் முகமதுவிடம் இருந்து 4 கிராம் மெத்தம்பெட்டமைன், இரண்டு செல்போன்கள், ஒரு கார் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப்பிறகு அவர்கள் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீஸார் கூறுகையில், ``சென்னையில் போதை பொருள் நெட்வொர்க்கை முழுமையாக கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அந்த வகையில்தான் நாங்கள், நான்கு பேரை கைது செய்திருக்கிறோம். தொடர்ந்து போதை பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்" என்றனர்.