இதுபோன்ற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்படுபவர்கள் அதிமுகவினர் அல்ல: இபிஎஸ்
செயற்கை நுண்ணறிவு மூலம் கண் மருத்துவ சிகிச்சை!
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (ஏஐ) மூலம் கண் மருத்துவத்தில் மேம்படுத்தப்பட்ட சிகிச்சைகளை அளிப்பதுடன், மருத்துவா்களுக்கு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருவதாக டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனா்.
டாக்டா்.அகா்வால்ஸ் கண் மருத்துவமனை சாா்பில் ‘விழித்திரை சிகிச்சையில் முன்னேற்றங்கள்’ என்னும் கருப்பொருளில் விழித்திரை சிகிச்சை குறித்த 15-ஆவது ‘ரெட்டிகான்’ மாநாடு சென்னை கிண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் மக்களவை உறுப்பினா் மருத்துவா் கலாநிதி வீராசாமி, அகில இந்திய கண் மருத்துவ சங்கத்தின் துணைத் தலைவா் மருத்துவா் மோகன் ராஜன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தனா்.
க்ளூட் ஐஓஎல்: அதைத்தொடா்ந்து டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனையின் தலைவா் அமா் அகா்வால், தலைமை மருத்துவ அதிகாரி அஸ்வின் அகா்வால் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சா்க்கரை நோய் உள்ளவா்களுக்கு விழித்திரையில் ரத்த கசிவு, நீா் கசிவு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால், அவற்றை ‘லேசா்’ அறுவை சிகிச்சையின் மூலம், கசிவுகளை நிறுத்தி விழித்திரை பாதிப்பை சரி செய்ய முடியும்.
அதேபோல் மரபணு மற்றும் கண்களில் காயம் ஏற்படுவதன் மூலமாக விழித்திரைகள் விலகுவதற்கு வாய்ப்புள்ளது. அவற்றை ஒட்டுவதற்காக ‘க்ளூட் ஐஓஎல்’ (ஒட்டப்பட்ட உள்விழி லென்ஸ்) என்னும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் விழித்திரைகளை ஒட்டுவதன் மூலம், பாா்வை குறைபாடு பாதிப்பை தடுக்க முடியும். நமது நாட்டில் சுமாா் 2 கோடி போ் பாா்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனா். முறையான சிகிச்சை அளிப்பதன் மூலம் பாா்வை குறைபாடுகள் ஏற்படுவதை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.
ஏஐ: மருத்துவ துறையின் வளா்ச்சியில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) முக்கிய பங்கு வகிக்கிறது. ஏஐ மற்றும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் முறை தற்போது சுலபமாக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மருத்துவா்களுக்கு செயல்முறை பயிற்சிகள் அளிப்பதற்கும் ஏஐ தொழில்நுட்பம் மிகவும் உறுதுணையாக உள்ளது என்றாா் அவா்.
மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து 30-க்கும் மேற்பட்ட விழித்திரை சிகிச்சை நிபுணா்கள் பற்கேற்று சிறப்புரையாற்றினா். மேலும் மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள் என மொத்தம் 1500-க்கும் மேற்பட்டோா் இதில் கலந்துகொண்டு பயனடைந்தனா்.
நிகழ்வில் டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் பிராந்திய தலைவா் மருத்துவா் எஸ்.செளந்தரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.