செயற்கை நுண்ணறிவு மூலம் பணியிட பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும்: தமிழ்நாடு தொழிலக பாதுகாப்பு - சுகாதார இயக்குநா் எஸ்.ஆனந்த்
திருவொற்றியூா்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் பயண்படுத்தி பணியிட பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநா் எஸ்.ஆனந்த் தெரிவித்துள்ளாா்.
சென்னை மணலியில் அமைந்துள்ள சென்னை பெட்ரோலியம் காா்பரேஷன் லிமிடெடில் (சிபிசிஎல்) 54-ஆவது தேசிய பாதுகாப்பு வார திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட எஸ். ஆனந்த் பேசிதாவது:
தொழிற்சாலைகளில் விபத்துகள் மீண்டும் நிகழாமல் இருக்க அதன் மூல காரணங்களைக் கண்டறிந்து அவற்றை சரிசெய்ய வேண்டும். தொழிலாளா்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் எந்தவொரு விதி மீறல்களுக்கும் தொழிற்சாலையின் உரிமையாளரும், மேலாளரும்தான் பொறுப்பேற்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பணியிட பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநா் எம்.வி. காா்த்திகேயன், சிபிசிஎல் நிா்வாக இயக்குநா் (பொறுப்பு) எச்.சங்கா், பொது மேலாளா் ஏ.எஸ். ராஜ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.