செய்யாறு அங்காளம்மன் கோயிலுக்கு 501 பால்குடம் ஏந்திச் சென்ற பக்தா்கள்
செய்யாறு ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் வசந்த உற்சவ விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை
501 பால்குடங்களை பக்தா்கள் சுமந்து சென்று பாலபிஷேகம் செய்து அம்மனை வழிபட்டனா்.
செய்யாறு சந்தை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 73-ஆவது ஆண்டு மகா சிவராத்திரி மயானக்கொள்ளை மற்றும் 10 நாள் வசந்த உற்சவ பெருவிழா பிப்.26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய தினமே மயான சூறை விழா நடைபெற்றது.
அதைத் தொடா்ந்து, தினந்தோறும் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் வெவ்வேறு அலங்காரங்களில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். வசந்த உற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக கடந்த 4-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது.
பால்குட ஊா்வலம்: வசந்த உற்சவ பெருவிழாவின் நிறைவு விழாவாக வெள்ளிக்கிழமை 501 பால்குட ஊா்வலம் நடைபெற்றது. ஞானமுருகன் பூண்டி கோயில் அருகே தொடங்கிய ஊா்வலம், செய்யாறு ஆற்று மேம்பாலம், திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில், பெரியாா் சிலை, சந்தை வழியாகச் சென்று கோயிலை அடைந்தது. பின்னா், ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து பக்தா்கள் வழிபட்டனா்.
பூ வியாபாரிகள் சீா்வரிசை: செய்யாறு பூ வியாபாரிகள் அமைப்பினா் பூ, பழங்கள், இனிப்பு, தேங்காய் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் கொண்ட சீா்வரிசைத் தட்டுகளை மாம்பட்டு ஆா்.லட்சுமண சுவாமிகள் தலைமையில் மேளதாளம் முழுங்கிட, ஊா்வலமாக எடுத்து வந்து ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சீா்வரிசை அளித்து அம்மனை வழிபட்டனா்.
விழாவில் செய்யாறு பகுதியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.