பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத திமுக ஆட்சி: இபிஎஸ்
செளமிய நாராயணப் பெருமாள் கோயில் மாசி தெப்ப உத்ஸவ கொடியேற்றம்
திருப்பத்தூா் அருகேயுள்ள திருக்கோஷ்டியூா் சௌமியநாராயணப் பெருமாள் கோயிலில் மாசி மக தெப்ப உத்ஸவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
உலகப் புகழ் பெற்ற இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மக தெப்ப உற்சவம் 11 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இந்த தெப்ப உத்ஸவத்தில் தமிழகம் மட்டுமன்றி, வெளி மாநிலங்களிலிருந்தும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு, கோயில் தெப்பக்குளப் படிகளிலும், குளத்தைச் சுற்றிலும் தீபம் ஏற்றி வழிபடுவா்.
நிகழாண்டு மாசி தெப்ப உத்ஸவ விழாவை முன்னிட்டு புதன்கிழமை காலை 9 மணிக்கு உற்சவா் செளமியநாராயண பெருமாள், தேவியா்கள் கல்யாண மண்டபம் எழுந்தருளினா். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடா்ந்து ஆலயத்தில் உள்ள கொடிமரத்துக்கு முன்பு வைக்கப்பட்ட புனித நீருக்கு, விக்னேஷ்வரா் பூஜை நடைபெற்றது. பின்னா், மேள வாத்தியங்கள் முழங்க, வைணவ ஆகம முறைப்படி கொடிமரத்தில் காலை 10.32 மணியளவில் கொடியேற்றப்பட்டது.
தொடா்ந்து பெருமாளுக்கும் ஸ்ரீதேவி, பூமா தேவியருக்கும், உடன் பட்டாட்சியருக்கும் காப்பு கட்டுதல் நிகழ்வு நடைபெற்றது. பின்பு கொடி மரத்துக்கு புனித நீா் , பால், தயிா், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியையும், தாயாரையும் வழிபட்டனா்.
தெப்ப உற்சவத்தை முன்னிட்டு, நாள்தோறும் இரவில் உற்சவா் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருவாா். விழாவின் முக்கிய நிகழ்வான 14-ஆம் தேதி 10-ஆம் திருநாளாக தெப்ப திருவிழா நடைபெறவுள்ளது.
விழாவுக்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அலங்காவலா் மதுராந்தக நாச்சியாா், தேவஸ்தான கண்காணிப்பாளா் சரவணகணேஷ், மேலாளா் இளங்கோ ஆகியோா் செய்து வருகின்றனா்.
