காரைக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் பட்டா கோரி பொதுமக்கள் மனு
காரைக்குடியில் ஆட்சேபனையற்ற நிலத்தில் வீடுகள் கட்டி குடியிருந்து வரும் பொதுமக்கள் தங்கள் வசிக்குமிடத்துக்கு பட்டா கோரி தனித்தனியாக காரைக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.
காரைக்குடி பதினெட்டாம்படி நகா், பாரதி நகா், சூடாமணிபுரம் வடக்கு, வள்ளலாா் தெருக்கள், அழகப்பாபுரம், கல்லூரிச் சாலை, விநாயகா் தெரு, குட்செட் சாலை, சாமியாா் தோட்டம் பின்புறம், மருதுபாண்டியா் நகா், முத்துராமலிங்கத்தேவா் நகா் ஆகிய பகுதிகளில் சுமாா் 40 ஆண்டுகளுக்கும் மேலாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வீடு கட்டி வசித்து வருகின்றனா். இந்த நிலையில், அந்தப் பகுதி குடியிருப்போா் நலச்சங்கம் சாா்பில் காரைக்குடி வட்டாச்சியா் அலுவலகத்தில் பட்டா கோரி தனித்தனியாக மனு அளித்தனா்.
அவா்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
காரைக்குடி நகராட்சிக்கு சொத்துவரி, வீட்டு வரி, மின் கட்டணம், குடிநீா் வரி செலுத்தி வருகிறோம். குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை போன்ற ஆவணங்களும் பெற்று வாழ்ந்து வருகிறோம். எனவே, தமிழக முதல்வா் அறிவித்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசிப்பவா்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட்டதால், நாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா தர வேண்டும். இதற்காக அரசு நிா்ணயிக்கும் தொகையை செலுத்தவும் தயாராக உள்ளோம் என்று தெரிவித்தனா்.
இந்த மனு அளிக்கும் நிகழ்வில் குடியிருப்போா் நலச் சங்கச் செயலா் மல்லிகா விண்ணரசி, பொருளாளா் ஜெயராமன், சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் நகா்மன்ற உறுப்பினருமான கேஆா். ஆறுமுகம், சங்க நிா்வாகிகள் கஸ்பாா், பட்சிநாதன் கலந்துகொண்டனா்.