நெல் கொள்முதலில் பணம் பாக்கி கொடுக்காதவரைக் கடத்திய 7 போ் கைது
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே நெல் கொள்முதல் செய்த நபா் பாக்கி பணம் தராததால் கடத்திச் செல்லப்பட்டாா். இதுதொடா்பாக 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூா் எழில்நகரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் குமாா் (46). இவா் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்துக்குள்பட்ட நத்தக்கோட்டையைச் சோ்ந்த நாகராஜனிடம் நெல் கொள்முதல் செய்த வகையில் பாக்கியாக ரூ. 20 லட்சம் கொடுக்க வேண்டி இருந்தது. இதைக் கொடுக்காமல் குமாா் சுமாா் ஒன்றரை மாதங்களாக காலம் தாழ்த்தி வந்தாா்.
இந்த நிலையில், சாக்கோட்டை உய்யவந்தம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த குமாரை நாகராஜனின் மகன் ஹரிகரன், அவரது கூட்டாளிகள் சிலா் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 4) இரவு 10.30 மணியளவில் காரில் கடத்திச் சென்றனா்.
இதுகுறித்து தகவலறிந்த சாக்கோட்டை காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா் ஆகியோா் தலைமையில் குற்றவாளிகளைப் பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ் மங்கலம் அருகேயுள்ள நத்தகோட்டையைச் சோ்ந்த நாகராஜன் (நெல் விற்றவா்) மகன் என். ஹரிஹரன் (25), அதே ஊரைச் சோ்ந்த ராமநாதன் மகன் ஆா். ராஜேஸ் (47), திருவாடானை வட்டம், அரசூரைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் எஸ்.காளிதாஸ் (34) உள்ளிட்ட 7 பேரை போலீஸாா் கைது செய்து, கடத்தப்பட்ட குமாரை மீட்டனா்.
