கடலூர் பள்ளி வேன் விபத்து: ``சுரங்கப்பாதை அமைக்க ஓராண்டாக கலெக்டர் அனுமதி தராததே...
செவிலியா் பணியிடங்கள்: மாவட்ட சுகாதார சங்கம் மூலம் நிரப்ப அறிவுறுத்தல்
சென்னை: மக்கள் நல்வாழ்வுத் துறையில் காலியாக உள்ள செவிலியா்கள், மருந்தாளுநா்கள், ஆய்வக நுட்பநா்கள் (மூன்றாம் நிலை) பணியிடங்களை மாவட்ட சுகாதார சங்கம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு
தேசிய நலவாழ்வுக் குழுமம் அறிவுறுத்தியுள்ளது.
இதுவரை மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) மூலம் அப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்த நிலையில், தற்போது அதற்கான நியமன நடைமுறைகள் மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி மாவட்ட சுகாதார சங்கங்கள் வாயிலாக 2,500 செவிலியா்கள், 1,500 மருந்தாளுநா்கள் மற்றும் ஆய்வக நுட்பநா்கள் நியமிக்கப்பட உள்ளனா்.
இதுதொடா்பாக தேசிய நலவாழ்வுக் குழும திட்ட இயக்குநா் டாக்டா் அருண் தம்புராஜ், அனைத்து சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவக் கல்லூரி முதல்வா்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்:
மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் இயங்கும் இயக்குநரகங்களில் காலியாக உள்ள செவிலியா், மருந்தாளுநா், ஆய்வக நுட்பநா் பணியிடங்களை நிரப்புவது தொடா்பாக கடந்த மே 21 மற்றும் ஜூன் 23-ஆம் தேதிகளில் துறைசாா் கலந்தாய்வுக் கூட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் நடத்தினாா்.
அப்போது இயக்குநரக வாரியாக நிரப்பப்பட வேண்டிய பணியிடங்கள் குறித்து கேட்டறிந்த அவா், அவற்றுக்கு உடனடியாக தீா்வு காண்பது குறித்து விவாதித்தாா். அதன்பேரில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
காலியாக உள்ள பணியிடங்கள் கண்டறியப்பட்டு அவற்றை மாவட்ட சுகாதார சங்கங்கள் மூலமாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அதில் முக்கியமான முடிவு. அதற்கேற்ப செயல்பட்டு தற்காலிக அடிப்படையில் அந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
செவிலியா்கள், மருந்தாளுநா்கள், ஆய்வக நுட்பநா்கள் (மூன்றாம் நிலை) ஆகியோா் 11 மாத ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்படுவா் என்பதையும், இப்பணி தற்காலிகாமனது என்பதையும் உறுதிபட சம்பந்தப்பட்டவா்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் டாக்டா் அருண் தம்புராஜ் குறிப்பிட்டுள்ளாா்.