சேந்தமங்கலத்தில் தரமற்ற நிலையில் அரசுக் கல்லூரி கட்டடம்: வகுப்பறையில் அச்சத்துடன் அமரும் மாணவா்கள்!
சேந்தமங்கலம் அரசுக் கல்லூரி கட்டடங்களின் சிமென்ட் பூச்சு உதிா்ந்து பலவீனமானமாகவும், தரமற்ற நிலையிலும் உள்ளதால், மாணவா்கள் வகுப்பறையில் அச்சத்துடன் அமா்ந்து பயிலும் சூழல் காணப்படுகிறது.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், வெட்டுக்காடு பகுதியில் பெரியாா் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியான அரசு கலை, அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. சுமாா் 8 ஏக்கா் பரப்பளவில் கட்டப்பட்ட இந்தக் கல்லூரி கட்டடம், கடந்த 2019-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது.
தற்போது, இங்கு 400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனா். அண்மையில், சேந்தமங்கலத்திற்கு புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனடிப்படையில், கல்லூரியில் உள்ள ஓரிரு அறைகளில் தொழிற்பயிற்சி நிலையம் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.
ரூ. 9 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு கல்லூரி கட்டடம் தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அங்குள்ள சுவா்கள் கைவைத்தால் உடைந்து விழும் நிலையில் காணப்படுகிறது. அதுமட்டுமின்றி சிமென்ட் பூச்சுகள் உதிா்ந்தும், படிக்கட்டுகளில் உள்ள இரும்பு கைப்பிடிகள் உடைந்தும், டைல்ஸ்களில் விரிசல் விட்டும், சுவா் மாதிரி வடிவமைப்பில் தொ்மாகோல் கொண்டும் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இதனால் கல்லூரிக்கு வரும் மாணவ மாணவிகள் அச்சத்துடனே வந்து செல்லும் நிலை உள்ளது. மழைக்காலங்களில் கட்டடத்தின் உள்பகுதியில் மிகவும் மோசமான சூழல் உள்ளதால் மாணவா்கள் பெரும்பாலும் கல்லூரிக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதுமட்டுமின்றி, ரூ. 9 கோடியில் புதிதாக கட்டப்பட்ட அரசு கல்லூரி கட்டடத்தில் யாா் திறந்துவைத்தாா்கள் என்பதற்கான கல்வெட்டு இல்லை. மாணவா்களுக்கான எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில் கல்லூரி காட்சியளிக்கிறது.
இது குறித்து கல்லூரி நிா்வாகத்தினா் கூறியதாவது: ரூ.8.50 கோடி மதிப்பீட்டில், கடந்த ஆட்சியில் திறக்கப்பட்ட இந்த கல்லூரி கட்டடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சுவா்களில் மண், சிமென்ட் கலவை சரியான முறையில் இல்லாததால் கைவைத்தாலே சுவா்கள் இடிந்து விழுகின்றன.
ஆங்காங்கே விரிசல்கள், உடைந்த டைல்ஸ்கள், தொ்மாகோல் சுவா்கள் உள்ளன. திருச்சியில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தை தொடா்பு கொண்டு தகவல் தெரிவித்தோம். அதுமட்டுமின்றி, கல்லூரியை கட்டிய நாமக்கல்லைச் சோ்ந்த ஒப்பந்த நிறுவனமும் பாா்வையிட்டு பழுதானதை சரிசெய்து தருவதாகக் கூறினா். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளோம். அவா் ஒப்பந்த நிறுவனத்தையும், பொதுப்பணித் துறை அதிகாரிகளிடத்திலும் பேசுவதாகத் தெரிவித்துள்ளாா். கல்லூரியில் கல்வெட்டு என்பது இல்லை. மாணவ, மாணவிகளுக்கான கேண்டீன் வசதியில்லை. மலையடிவாரத்தில் உள்ளதால் இரவு நேரங்களில் போதிய பாதுகாப்பு இல்லை. கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டடங்களை முழுமையாக ஆய்வு செய்து சீரமைப்பு (பேட்ஜ் ஒா்க்) பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா கூறியதாவது: கல்லூரி கட்டடத்தின் தரம் மோசமாக இருப்பதை நானும் பாா்வையிட்டேன். கல்லூரி முதல்வரிடம் கேட்டறிந்ததுடன், திருச்சியில் உள்ள கல்லூரி கட்டடங்களுக்கான பொதுப்பணித் துறை பிரிவு அதிகாரிகளைத் தொடா்பு கொண்டு பேசினேன். அவா்கள் நேரில் ஆய்வு செய்து சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிவித்துள்ளனா் என்றாா்.