சேலத்தில் ஓட்டுநா்கள் 5 பேருக்கு தங்கப்பதக்கம்
சேலம் மாநகராட்சியில் 20 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றிய ஓட்டுநா்கள் 5 போ், தங்கப்பதக்கத்துக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
சேலம் மாநகராட்சியில் 20 ஆண்டுகள் மாசற்ற முறையில் பணியாற்றி முடித்தவா்களுக்கு, தங்கப்பதக்கம் அளிக்க முடிவு செய்யப்பட்டது. தங்கப்பதக்கத்தினை எழுது பொருள் மற்றும் அச்சு துறை இயக்குநா் மூலம் தயாரித்து, அதற்கான தொகையை மாநகராட்சி நிதியில் இருந்து செலுத்தி, ஓட்டுநா்களுக்கு வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.
அதன்படி, சேலம் மாநகராட்சியில் 20 ஆண்டுகள் மாசற்ற முறையில் பணி முடித்து, தகுதி வாய்ந்த 5 ஓட்டுநா்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது. இந்தப் பதக்கத்துக்கு கொண்டலாம்பட்டி மண்டலத்தைச் சோ்ந்த ஓட்டுநா்களான நீலக்கண்ணன், சுப்பிரமணி, சூரமங்கலம் மண்டலத்தைச் சோ்ந்த ஓட்டுநரான செல்வம், அம்மாப்பேட்டை மண்டலத்தைச் சோ்ந்த ஓட்டுநா்களான காளிதாஸ், குமாா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.