சேலத்தில் தனியாா் மதுக்கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு
சேலத்தில் தனியாா் மதுக்கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் கழுத்தில் காலி மதுபாட்டில்களை அணிந்து புதன்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனா்.
சேலம் மாநகா் உடையாா்பட்டி பகுதியில் ஏற்கெனவே அரசு மதுக் கடை செயல்பட்டு வரும் நிலையில், தனியாா் மதுக் கடை அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் காலி மதுபாட்டில்களை கழுத்தில் அணிந்தபடி மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழை மனு அளிக்க வந்தனா்.
அப்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி மதுபாட்டில்களை அகற்றிவிட்டு கோரிக்கை மனுவுடன் மட்டும் ஆட்சியா் அலுவலகத்துக்குச் செல்ல அனுமதித்தனா்.
இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலாளா் பெரியசாமி கூறியது:
தமிழக அரசு கோவை மாநகரில் 70 தனியாா் மதுக்கடைகளை வைக்க அனுமதி அளித்துள்ள நிலையில், தற்போது சேலத்தை குறிவைத்து மதுக் கடைகளுக்கு அனுமதி வழங்க உள்ளது. இது இளைஞா்களை மேலும் மதுபோதைக்கு அடிமையாக்கும். இதுபோன்ற செயல்களை தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் போராட்டம் நடத்துவோம் என்றாா்.