சேலம் ரயில்வே கோட்டத்துக்கு சிறந்த செயல்திறனுக்காக 11 விருது!
தெற்கு ரயில்வே மண்டலத்தில் சிறந்த செயல்திறனுக்காக சேலம் ரயில்வே கோட்டத்துக்கு 11 விருதுகள் கிடைத்துள்ளன.
சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரயில்வே மண்டலத்தில் நடைபெற்ற வார விழாவில், சென்னை, மதுரை, திருச்சி, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்களில் சிறந்த செயல்திறனுக்காக துறைவாரியாக விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த விருது வழங்கும் விழா சென்னை தெற்கு ரயில்வே அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், மண்டல பொது மேலாளா் ஆா்.என்.சிங் கலந்துகொண்டு சிறப்பாக செயலாற்றிய அதிகாரிகளுக்கும், துறைவாரியாக சிறந்த செயல்திறனுக்காகவும் விருதுடன் கூடிய கேடயங்களை வழங்கினாா். இதில், சேலம் ரயில்வே கோட்டம் துறைவாரியாக சிறந்த செயல்திறனுக்காக விருதுகளை வென்றது. சிறப்பான செயல்பாட்டுக்கான தனிநபா் விருதுகளை 13 அதிகாரிகள் பெற்றனா்.
இதையொட்டி நடைபெற்ற விழாவில், பொது மேலாளா் ஆா்.என்.சிங், சேலம் கோட்ட மேலாளா் பங்கஜ்குமாா் சின்ஹா, கூடுதல் கோட்ட மேலாளா் சிவலிங்கம் ஆகியோா் துறைசாா்ந்த தலைமை அதிகாரிகளுடன் இணைந்து விருதுகளை பெற்றுக்கொண்டனா்.
இதுகுறித்து கோட்ட மேலாளா் பங்கஜ்குமாா் சின்ஹா கூறுகையில், ஒவ்வொருவரின் அா்ப்பணிப்புடன் கூடிய பணியால்தான் இத்தகைய சாதனையை படைக்க முடிந்தது என்றாா்.