முதல் டி20: 13 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டிப்பிடித்த இந்திய அணி!
`சைத்ராவும் நட்சத்திராவும் 'உருட்டு'னு சொன்னது ரொம்பவே காயப்படுத்திடுச்சு’ - ஜெய் ஆகாஷ் சொல்வதென்ன?
ஜெய் ஆகாஷ், ரேஷ்மா நடிக்க, ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வந்த 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' தொடர் முடிவுக்கு வந்ததையடுத்து, இருவரின் ரசிகர்களின் சமூக வலைதளங்களில் பரஸ்பரம் சண்டை போட்டு வருகின்றனர்.
`சீரியல் முடிவடைய ஜெய் ஆகாஷ்தான் காரணம், ஷூட்டிங்கிற்கு அவர் போதிய ஒத்துழைப்பு தராததாலேயே முடித்துள்ளனர்' என ரேஷ்மா ரசிகர்கள் கூற, பதிலுக்கு ரேஷ்மாவைத் திட்டித் தீர்க்கின்றனர் ஜெய் ஆகாஷ் ரசிகர்கள்.
உண்மையிலேயே என்ன நடந்தது? ஏன் சீரியல் முடிக்கப்பட்டது' எனத் தெரிந்து கொள்ள ஜெய் ஆகாஷிடமே பேசினோம்.
''இந்த சீரியலின் கதைப்படி ஹீரோ, ஹீரோயினை விட வயசு வித்தியாசம் அதிகம் உள்ளவர். அதானல் அந்தத் தோற்றத்தைக் கொண்டு வர எவ்வளவோ மெனக்கெட்டேன். வாக்கிங் போறதை நிறுத்தினேன். உடற்பயிற்சிகளை நிறுத்தினேன். இப்படி எல்லாம் டெடிகேடிவா ஒர்க் பண்ணிட்டு இருந்தப்போ ஒரு விபத்து நடந்திடுச்சு. அதனால் கால்ல பெரிய அடி.
இருந்தாலும் ஒரு சீரியல் ஒளிபரப்பாகுதுன்னா அதை நம்பி நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இருக்குங்கிறது எனக்குத் தெரியும். அதனாலேயே வலியைப் பொறுத்துகிட்டு நடிச்சுக் கொடுத்துட்டு வந்தேன்.
ஆனா ஒருகட்டத்துல நான் படற கஷ்டத்தைப் பார்த்துட்டு என் வீட்டுல காலைக் கவனிப்போம்னு சொல்லி டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போனாங்க. அங்க போன பிறகே நிலைமையின் விபரீதம் புரிஞ்சது. உடனடியா ஆபரேஷன் பண்ணியாகணும்னு சொல்லிட்டாங்க. ஆபரேஷனும் நடந்திடுச்சு.
தயாரிப்புத் தரப்புல விஷயத்தைச் சொல்லி உடனே நடிக்க வர முடியாதுன்னு சொன்னேன். எனக்குப் பதிலா வேறு ஆர்ட்டிஸ்ட்டைக் கமிட் பண்ணிகிட்டாலும் பரவால்லனு சொல்லிட்டேன். தயாரிப்புத் தரப்புமே இதைப் புரிஞ்சுகிட்டது.
ஆனா இதுக்கிடையில் நான் நடிக்க வராத நாள்கள்ல சீரியலின் டி.ஆர்.பி. இறங்கிடுச்சுனு சொல்லி சேனல்ல இருந்து புரடக்ஷன் தரப்புல கேட்டதாச் சொல்றாங்க. அதேபோல என் கேரக்டருக்குப் புது ஆர்ட்டிஸ்ட்டைக் கொண்டு வர்றதுலயும் புரடக்ஷன் மற்றும் சேன்ல தரப்புக்கிடையே ஒருமித்த கருத்து எட்டப்படலைனும் பேசிக்கிட்டாங்க.
அதுக்கு மேல என்ன நடந்ததுனு தெரியலை, சீரியல் முடிஞ்சிடுச்சுனு தகவல் வந்தது. இதுல என் மீது என்ன தப்பு? ஆபரேஷன் பண்ணின காலோட உடனே நடிக்க வந்து அது மறுபடியும் பெரிய பிரச்னை ஆச்சுன்னா யார் பொறுப்பு?
நிஜத்துல நடந்தது இதுதான். சீரியல் முடிவுக்கு வந்ததும் என் ரசிகர்களுக்குத் தெரிவிக்கணும்கிற ஒரே காரணத்துக்காக நான் சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டேன். அதுல சிலர் நீங்க இல்லாததாலேயே சீரியலை முடிச்சிட்டாங்க'னு கமென்ட் போட்டிருக்காங்க. என்னுடைய ரசிகர்கள் என்னைப் புகழ்ந்துதானே பேசுவாங்க? அதை சீரியஸா எடுத்துகிட்ட ரேஷ்மா ரசிகர்கள் சிலர் என் ரசிகர்களைத் திட்ட, பதிலுக்கு என் ரசிகர்கள் அவங்களைத் திட்டறதுமா நீண்டது இந்த விவகாரம்.
ஏன் நடிக்க வரலங்கிறை நான் ஏற்கனவே சொல்லிட்டதால நான் அமைதியாகவே இருந்தேன். ஆனா ரேஷ்மாதான் என் ரசிகர்களைத் திட்டி ஒரு பதிவு போட்டாங்க. அதுல 'புரபஷனலிசத்தை என்கரேஜ் பண்ணச் சொல்லுங்க' எனக்குச் சொல்லியிருந்தாங்க. அதுதான் எனக்கு வருத்தமாகிடுச்சு.
உடல் அடிபட்டு ஷூட்டிங் வர முடியலைனா அதை தயாரிப்பு மற்றும் சேனல் தரப்புக்குத்தான் சொல்லணும். அங்க நான் சொல்லிட்டேன். சக ஆர்ட்டிஸ்டா இவங்களுக்குத் தர வேண்டிய மரியாதையை நான் தந்தேன். ஆனா இவங்ககிட்ட வந்து நான் எனக்கு அடிபட்டிருக்கு பாருங்கனு டாக்டர் சர்டிபிகேட் கொண்டு வந்து காட்டணுமா என்ன? அவங்க அப்படிச் சொன்னது உண்மையிலேயே எனக்கு வருத்தமா இருந்தது.
இதுல இன்னொரு வேடிக்கை என்னன்னா, ரேஷ்மாக்கு ஆதரவா அவங்க ஃப்ரண்ட்ஸ் சைத்ரா, நட்சத்திரா ரெண்டு பேரும் வந்து நான் சொன்னதெல்லாம் பொய்ங்கிற அர்த்தத்துல 'உருட்டு'னு குறிப்பிட்டிருக்காங்க. அந்த வார்த்தையும் என்னை ரொம்பவே காயப்படுத்திடுச்சு. எல்லோருமே ஃபீல்டுல இருக்கிறவங்க. நாளைக்கே ஒருத்தருக்கொருத்தர் சேர்ந்து புராஜெக்ட் பண்ண வேண்டி வரலாம். அப்ப ஒருத்தருக்கொருத்தர் எப்படி முகத்துல முழிக்கிறது சொல்லுங்க' என்கிறார் ஜெய் ஆகாஷ்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...