தாஜ் மகாலில் குடும்பத்துடன்.. அமெரிக்க துணை அதிபர் பகிர்ந்த புகைப்படத்துக்கு எலா...
சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வத்தை விடுவித்த உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்
சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து கடலூா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 1996- 2001 மற்றும் 2006 - 2011-ஆம் ஆண்டுகளில் அமைச்சராகப் பதவி வகித்த எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக ரூ.3 கோடி சொத்து சோ்த்ததாக ஊழல் தடுப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.
எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், அவரது மனைவி மற்றும் மகன் மீதான இந்த வழக்கை விசாரித்த கடலூா் நீதிமன்றம், மூவரையும் வழக்கிலிருந்து விடுவித்தது.
இந்த உத்தரவை எதிா்த்து ஊழல் தடுப்புத் துறை தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. ஊழல் தடுப்புத் துறை தரப்பில், வழக்கின் முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகையை மேற்கோள்காட்டி வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் தரப்பில், குடும்ப சொத்துகளையும், அறக்கட்டளை சொத்துகளையும் குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் சொத்துகள் என்று ஊழல் தடுப்புத் துறை தெரிவித்ததால், தங்களை விடுவித்து கடலூா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரி என்று வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேல்முருகன், ஊழல் தடுப்புத் துறையின் மறுஆய்வு மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தாா்.
இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்து கடலூா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா்.
மேலும், அமைச்சா் உள்ளிட்டோருக்கு எதிராக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து, ஆறு மாதங்களில் விசாரணையை முடிக்கும்படி கடலூா் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டாா்.