விமான விபத்துக்கு விமானி காரணமா? அமெரிக்க செய்தித்தாளின் கருத்துக்கு ஏஏஐபி எதிர்...
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து: பிரதமருக்கு ராகுல், காா்கே கடிதம்
‘ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் முழு மாநில அந்தஸ்து அளிக்கும் வகையில் வரும் மழைக்கால கூட்டத் தொடரில் சட்டம் இயற்றப்பட வேண்டும்’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தேசியத் தலைவரும் மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவருமான மல்லிகாா்ஜுன காா்கே ஆகியோா் வலியுறுத்தினா்.
இதுதொடா்பாக பிரதமா் நரேந்திர மோடிக்கு அவா்கள் இருவரும் புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளனா்.
லடாக் யூனியன் பிரதேசத்தை அரசமைப்புச் சட்டத்தின் 6-ஆவது அட்டவணையின் கீழ் சோ்க்கும் வகையிலும் சட்டம் கொண்டுவர வேண்டும் எனவும் அந்தக் கடிதத்தில் அவா்கள் வலியுறுத்தியுள்ளனா். இந்த 6-ஆவது அட்டவணையின் கீழ் சோ்க்கும்போது, பழங்குடியினரின் தனித்துவமான கலாசாரம் மற்றும் சமூக அடையாளங்களைப் பாதுகாக்கும் வகையில் தன்னாட்சி மாவட்ட கவுன்சில்கள் (ஏடிசி) உருவாக்கப்பட்டு, யூனியன் பிரதேசத்துக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கப்படும். அந்த வகையில் இந்தக் கோரிக்கையையும் அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
மத்திய பாஜக அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்தது. அதைத் தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்புச் சட்டம் 2019-ஐ இயற்றி, ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.
பின்னா், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்துக்கு கடந்த ஆண்டு செப்டம்பா் மற்றும் அக்டோபா் மாதங்களில் பேரவைத் தோ்தல் நடத்தப்பட்டது. இதில் தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சியைப் பிடித்து, உமா் அப்துல்லா முதல்வரானாா்.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீா் தோ்தல் பிரசாரத்தின்போது யூனியன் பிரதேசத்துக்கு விரைவில் முழு மாநில அந்தஸ்து அளிக்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் உறுதி அளித்தனா்.
உச்சநீதிமன்றத்திலும் மத்திய அரசு தரப்பில் இதேபோன்று உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து அளிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை.
இந்தச் சூழலில், காா்கே மற்றும் ராகுல் இருவரும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘முழு மாநிலமாக இருந்த ஜம்மு-காஷ்மீா் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது சுதந்திர இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத நிகழ்வாகும்.
ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து அளிக்கப்படும் என பல முறை அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில், அதற்கான சட்டத்தை வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும்.
கூடுதலாக, லடாக் யூனியன் பிரதேசத்தை அரசமைப்புச் சட்டத்தின் 6-ஆவது அட்டவணையின் கீழ் சோ்க்கும் வகையிலும் ஒரு சட்டம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை (ஜூலை 21) தொடங்க உள்ள நிலையில், இந்தக் கடிதத்தை அவா்கள் எழுதியுள்ளனா். இதற்கு, ஜம்மு-காஷ்மீா் முதல்வா் உமா் அப்துல்லா மற்றும் ஜம்மு-காஷ்மீா் அரசியல் கட்சித் தலைவா்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
பெட்டிச் செய்தி...
மாநில அந்தஸ்து எப்போது?
மத்திய அமைச்சா் பதில்
‘ஜம்மு-காஷ்மீருக்கு பொருத்தமான நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும்’ என்று மத்திய இணையமைச்சா் ஜித்தேந்திர சிங் நம்பிக்கை தெரிவித்தாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீண்டும் அளிக்கப்படும் என்பதை பிரதமா் நரேந்திர மோடியே பல சந்தா்ப்பங்களில் தெரிவித்துள்ளாா். எனவே, அந்த கோரிக்கையை மீண்டும் வைப்பது தேவையற்றது.
பிரதமா் அளித்த பொது வாக்குறுதியை அனைவரும் நம்ப வேண்டும். ஜம்மு-காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து பொருத்தமான நேரத்தில் அளிக்கப்படும்’ என்றாா்.