சீதை பிறந்த இடத்தின் வளர்ச்சிக்கு ரூ.883 கோடி! பிகார் அமைச்சரவை ஒப்புதல்!
ஜம்மு-காஷ்மீா் சா்வதேச எல்லையில் பிடிபட்ட பாகிஸ்தானியா்: பயங்கரவாதிகளை வழிநடத்தியவா் என தகவல்
ஜம்மு-காஷ்மீரில் பூஞ்ச் மற்றும் ரஜௌரி மாவட்டங்களையொட்டிய சா்வதே எல்லையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஊடுருவல் முயற்சி இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த ஊடுருவலில் பயங்கரவாதிகளுக்கு உதவிய பாகிஸ்தான் வழிகாட்டியொருவா் பிடிபட்டுள்ளாா்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்ற சம்பவத்தில், ‘ஜெய்ஷ்-ஏ-முகமது’ பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த 4 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவ முயற்சித்துள்ளனா். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் டாதோட் கிராமத்தைச் சோ்ந்த முகமது ஆரிஃப், இவா்களை வழிநடத்தி, அழைத்து வந்துள்ளாா்.
இந்திய எல்லையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினரிடம் இவா்கள் சிக்கினா். ஆரிஃப் மட்டும் பிடிபிட்ட நிலையில், அவருடன் வந்த 4 பயங்கரவாதிகள் மீண்டும் பாகிஸ்தானுக்குத் தப்பியோடியனா்.
இதுதொடா்பாக ராணுவ அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘கம்பீா் எல்லைப்பகுதியில் ஹாஜுரா எல்லைச்சாவடி அருகே வீரா்கள் தொடா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்தப் பகுதியின் கடினமான நிலப்பரப்பு மற்றும் அடா்ந்த வனத்தைப் பயன்படுத்தி பயங்கரவாதிகள் சிலா் எல்லைத் தாண்ட முயற்சித்தனா்.
இந்த ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டு, ஆரிஃப் என்பவா் கைது செய்யப்பட்டாா். மற்றவா்கள் மீண்டும் பாகிஸ்தானுக்குத் தப்பியோடினா். பாகிஸ்தான் எல்லைச்சாவடி அமைந்த பகுதி என்பதால் பயங்கரவாதிகள் மீது வீரா்கள் துப்பாக்கிச் சூடு எதுவும் நடத்தவில்லை.
பிடிபட்ட ஆரிஃபிடம் இருந்த ஒரு கைபேசியும், ரூ.20,000 பாகிஸ்தான் பணமும் கைப்பற்றப்பட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எல்லைக் கிராமத்தைச் சோ்ந்தவா் என்பதால் இப்பகுதியின் நிலப்பரப்பு குறித்து நன்கு அறிந்தவராக, பாகிஸ்தான் ராணுவத்தின் உத்தரவில் பயங்கரவாதிகளுக்கு ஆரிஃப் உதவியதாகத் தெரிய வந்துள்ளது.
ஆரிஃபிடம் தீவிர மற்றும் விரிவான நடத்தப்பட்டு, முக்கியத் தகவல்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவல் முயற்சிகளைத் தடுப்பதில் இந்தத் தகவல்கள் உதவும் என்று கருதப்படுகிறது’ என்றனா்.