தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்தியது டிஜிட்டல் இந்தியா திட்டம்: அமித் ஷா
இபிஎஸ் வீட்டிற்குச் செல்வீர்களா? - முதல்வர் ஸ்டாலின் பதில்!
’இபிஎஸ் வீட்டிற்குச் செல்வீர்களா?’ என்று முதல்வர் ஸ்டாலினிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு ’அந்தப் பகுதியில் இருந்தால் நிச்சயம் செல்வேன்’ என்று முதல்வர் பதில் அளித்தார்.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் இன்று (ஜூலை 1), ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பைத் தொடக்கி வைத்து, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் விவரம்:
”திராவிட முன்னேற்றக் கழக அரசியல் வரலாற்றில் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் வரலாற்றிலும் மிக முக்கியமான நாளாக, இந்த நாள் அமையப் போகிறது.
‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற மகத்தான முன்னெடுப்பை திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இன்றைக்கு, நான் தொடங்கி வைக்கிறேன். இன்று தொடங்கி, 45 நாள்கள் தொடர்ந்து இந்தப் பயணம் நடைபெறுகிறது. இன்று 38 வருவாய் மாவட்டக் கழகங்களிலும், அந்தந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் சேர்ந்து, எனது இந்தச் செய்தியாளர் சந்திப்பு முடிந்தவுடன் இன்றைக்கு அவரவர் பகுதிகளில் ஊடகத் தோழர்களையும், பத்திரிகை நண்பர்களையும் சந்திக்க இருக்கிறார்கள்.
நாளை, தமிழ்நாட்டில் இருக்கும் 76 மாவட்டக் கழகங்களிலும் ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்ற இருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து, ஜூலை 3 முதல், தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திக்க இருக்கிறோம். அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கழக முன்னோடிகள் அனைவரும் அவரவர் சொந்த வாக்குச்சாவடிகளில் இருக்கும் வீடுகளுக்கு நேரில் செல்ல இருக்கிறார்கள்.
இதுக்காக, திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி சார்பில், தொகுதிக்கு ஒருவர் என்று 234 நபர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. பயிற்சி பெற்ற அந்த 234 நபர்களும் தமிழ்நாடு முழுவதும் 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இருக்கும் பூத் டிஜிட்டல் ஏஜெண்ட்களுக்கு (BDA) பயிற்சி தந்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க, மக்கள் அனைவரையும் ஓரணியில் திரட்டுவதுதான் இதன் அடிப்படையும், முதன்மையான நோக்கமும்!
தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் – அதை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதற்கான முயற்சிதான் இது.
மத்திய பா.ஜ.க. அரசால் நம்முடைய தமிழும் - தமிழ்நாடும் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது என்று நான் உங்களுக்கு அதிகம் விளக்கத் தேவையில்லை.
சுருக்கமாகத் தலைப்புச் செய்திகளை மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன்.
அரசியல், பண்பாடு, மொழி, பொருளாதாரம் என்று அனைத்து வகையிலும் நமக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகளைச் சொல்ல வேண்டும் என்றால்,
அனைத்திலும் வளர்ந்த தமிழ்நாட்டை, மத்திய அரசு பல்வேறு வழிகளில் புறக்கணிக்கிறது.
தமிழ்நாட்டில் இருந்து வசூலிக்கப்படும் வரி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தரப்படுவது இல்லை.
தமிழ்நாட்டின் நிதி உரிமைகள் ஜி.எஸ்.டி. கொள்கை மூலமாக பறிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு உரிய நிதி கொடுப்பதில்லை.
தமிழ்நாட்டுக்கான சிறப்புத் திட்டங்கள் இல்லை.
பள்ளிக் கல்விக்கான நிதி மறுக்கப்படுகிறது. மத்திய அரசின் திட்டங்களுக்கும் தமிழ்நாடு அரசுதான் நிதி ஒதுக்கி நிறைவேற்றி வருகிறது.
நீட் தேர்வு மூலமாக அடித்தட்டு மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவு சிதைக்கப்படுகிறது.
தேசியக் கல்விக் கொள்கை, ஹிந்தித் திணிப்புக் கொள்கையாக மட்டுமே இருக்கிறது.
தமிழுக்கு வெறும் 113 கோடியும், சமஸ்கிருதத்திற்கு 2,532 கோடியும் ஒதுக்கி இருக்கிறார்கள்.
தமிழர்களின் வரலாற்றுப் பெருமையைச் சொல்லும் கீழடி அறிக்கையைத் திட்டமிட்டு மறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இவற்றை எல்லாம் நாம் தொடர்ந்து பேசுவதால், தொகுதி மறுவரையறை என்ற பெயரில், தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதிகள் எண்ணிக்கையைக் குறைக்கத் திட்டம் தீட்டுகிறார்கள். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்” என்றார்.
செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின்.
கேள்வி: எதிர்க்கட்சித் தலைவர் மக்களைச் சந்திக்கும் பயணத்தை 7-ஆம் தேதியிலிருந்து தொடங்கப்போகிறார். இந்தப் பயணத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: அவர் இப்போதுதான் மக்களை சந்திக்கப் போகிறார். இப்போது தான்... நாங்கள் எப்போதிலிருந்தோ சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
கேள்வி: எடப்பாடி பழனிசாமி அவர்களின் வீட்டிற்குச் செல்வீர்களா ?
பதில்: அது அங்கிருக்கக்கூடிய சூழ்நிலையைப் பொறுத்திருக்கிறது. பொறுப்பு ஒவ்வொருவரிடமும் ஒப்படைத்திருக்கிறோம். அவர்கள் சூழ்நிலைக்கேற்றவாறு செல்வார்கள். நான் அந்தப் பகுதியில் இருந்தால் நிச்சயம் செல்வேன்.
கேள்வி: தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள்தான் இருக்கிறது. ஆனால் கூட்டணிக் கட்சிகள் கூடுதல் இடங்கள் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதை தி.மு.க. எப்படி சமாளிக்கப் போகிறது?
பதில்: தேர்தல் தேதி அறிவித்த பிறகு நாங்கள் உட்கார்ந்து பேசுவோம். அதைச் சமாளித்துவிடுவோம்.
When asked if he would go to the EPS house, Chief Minister Stalin replied, "If I were in that area, I would definitely go."
இதையும் படிக்க: செப்பறை அழகிய கூத்தர் கோயில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!