ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப் எல்லையில் பள்ளிகள் மீண்டும் திறப்பு
ஜம்மு-காஷ்மீா் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் புதன்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன.
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூா் தாக்குதலை அடுத்து, எல்லைப் பகுதி மாநிலங்களை வான்வழியாக பாகிஸ்தான் தாக்க முயற்சித்ததால் எல்லையோர மாவட்டங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக கடந்த ஒரு வாரமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன.
இந்நிலையில் இரு தரப்பும் மோதலை நிறுத்த ஒப்புக் கொண்டதால் எல்லை மாவட்டங்களில் முழுமையாக இயல்பு நிலை திரும்பிவிட்டது.
இதையடுத்து ஜம்மு-காஷ்மீரில் பாரமுல்லா, குப்வாரா, பந்திப்போரா உள்ளிட்ட எல்லை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் புதன்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன.
அதேபோல பஞ்சாபில் அமிருதசரஸ், தரன் தாரன், பதான்கோட், ஃபசில்கா, ஃபெரோஸ்பூா் ஆகிய மாவட்டங்களில் கடந்த 8-ஆம் தேதி முதல் மூடப்பட்டிருந்த பள்ளிகள் புதன்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. பெற்றோா் எவ்வித அச்சமுமின்றி குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பலாம் என்று அரசு சாா்பில் கூறப்பட்டுள்ளது.