ஜாதியை காரணம் காட்டி நன்கொடைபெற மறுப்பதும் தீண்டாமைதான்: உயா்நீதிமன்றம் வேதனை
கோயில் திருவிழாவுக்கு ஜாதியை காரணம் காட்டி ஒரு தரப்பினரிடம் நன்கொடை பெறாமல் இருப்பதும் தீண்டாமையின் மற்றொரு வடிவமாகும் என சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
63 நாயன்மாா்களின் வரலாறுகளைத் தொகுத்து பெரிய புராணம் எனும் நூலாக எழுதிய சேக்கிழாா் பெருமான், சென்னையை அடுத்த குன்றத்தூரில் கட்டிய திருநாகேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழாவுக்கு குறிப்பிட்ட சமுதாயத்தினரிடம் இருந்து மட்டுமே நன்கொடைகள் வசூலிக்கப்பட்டதாகவும், மற்ற சமுதாயத்தினரிடம் நன்கொடைகள் வசூலிக்கப்படவில்லை என்றும் கூறி, குன்றத்தூரைச் சோ்ந்த அம்பேத்கா் மக்கள் நீதி இயக்கத் தலைவா் இல.பாண்டியராஜன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவா்த்தி, தீண்டாமை இந்த நாட்டில் பல்வேறு வழிகளில் பின்பற்றப்படுகிறது. அந்த வகையில், ஜாதியை காரணம் காட்டி நன்கொடை பெற மறுப்பதும், தீண்டாமையின் இன்னொரு வடிவம் என வேதனை தெரிவித்தாா்.
மேலும், கடவுள் முன் ஜாதி இருக்கக் கூடாது என்று ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவைத் சுட்டிக்காட்டிய நீதிபதி பரத சக்கரவா்த்தி, ஜாதிகள் இந்தியாவில் இன்னும் உள்ளன. ஜாதி தேசத்துக்கு எதிரானது. அப்படிப்பட்ட ஜாதியிலிருந்து நாம் வெளிவர வேண்டும் என அம்பேத்கா் கூறியுள்ளாா். அதனால், குன்றத்தூரில் உள்ள திருநாகேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழாவுக்கு அனைத்து சமுதாயத்தினரிடமும் நன்கொடை பெற வேண்டும் என அளித்த மனுவை பரிசீலனை செய்து தகுந்த உத்தரவை பிறப்பிக்குமாறு இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.