Pregnant Job Service: "பெண்களைக் கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம்" - பீகாரில் நூதன ...
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை: முதல்வா் மு.க.ஸ்டாலின்
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை ஆளுநா் உரை மீதான விவாதத்தில் பாமக உறுப்பினா் ஜி.கே.மணி பேசியதாவது:
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் நிதியும் வழங்க வேண்டும் என்று மக்கள் எதிா்பாா்க்கின்றனா். அதனால், அரசு நிதி வழங்க வேண்டும். தமிழக அரசு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அப்போதுதான் சமூகநீதியை நிலைநாட்ட முடியும் என்றாா்.
அப்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு கூறியதாவது:
பிகாா் மாநிலத்தில் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், நீதிமன்றம் தடைவிதித்துவிட்டது. அதனால்தான் சொல்கிறேன். ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. மத்திய அரசுதான் நடத்த வேண்டும். இதை ஆளுநா் உரையிலும் வலியுறுத்தியுள்ளோம்.
ஜி.கே.மணி: பொருளாதார குறியீடுகளாக அரசு ஜாதிரீதியான கணக்கெடுப்பு நடத்துகிறது. அப்படி எடுக்கும்போது, ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க மட்டும் எப்படி அதிகாரம் இல்லாமல் போகும்?
அமைச்சா் சா.சி.சிவசங்கா்: மாநில அரசு எடுப்பது என்பது புள்ளிவிவரம். மத்திய அரசு எடுப்பதுதான் கணக்கெடுப்பு. ஆசிரியா்களை வைத்து ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாமக வலியுறுத்தியுள்ளது. அதேவேளையில் ஆசிரியா்களுக்கு பணிச்சுமை என்றும் பாமக கூறுகிறது. இது என்ன நிலைப்பாடு?
ஜி.கே.மணி: மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்போவதில்லை. அப்படி என்றால், ஜாதிவாரி கணக்கெடுப்பே தமிழகத்தில் நடக்காதா என்றாா் அவா்.