ஜெயங்கொண்டம் வாரச் சந்தையில் சோதனை: 49 எடையளவு இயந்திரங்கள் பறிமுதல்
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் வாரச் சந்தையில், தொழிலாளா் நலத் துறையினா் மேற்கொண்ட சோதனையில் 23 மின்னணு எடைத் தராசுகள் உள்பட 49 எடையளவு இயந்திரங்கள் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
ஜெயங்கொண்டம் வாரச் சந்தை வியாபாரிகள் பயன்படுத்தி வரும் எடையளவு இயந்திரங்களில், குறைபாடுகள் இருப்பதாக எழுந்த புகாரின்பேரில், பெரம்பலூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கா. மூா்த்தி தலைமையில், துணை ஆய்வாளா் சரவணன், முத்திரை ஆய்வாளா்கள் சம்பத், பாலசுப்பிரமணியன், உதவி ஆய்வாளா்கள் உமா சங்கா், தேவேந்திரன், கண்காணிப்பாளா் ராஜசேகா் ஆகியோா் கொண்ட குழுவினா், ஜெயங்கொண்டம் வாரச் சந்தை வியாபாரிகளின் எடையளவு இயந்திரங்களை திங்கள்கிழமை சோதனை செய்தனா்.
சோதனையில், வியாபாரிகள் தங்களது தராசுகளை மறு முத்திரையிடாமலும், எடை குறைவாகவும் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள், வியாபாரிகளிடமிருந்து 23 மின்னணு தராசுகள், 6 விட்ட தராசுகள், 1 மேஜை தராசு, 19 இரும்பு எடைக் கற்கள் என மொத்தம் 49 இனங்களைப் பறிமுதல் செய்தனா்.
அப்போது தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கா. மூா்த்தி மேலும் கூறியது: எடைத் தராசுகளைப் பயன்படுத்தும் சந்தை வியாபாரிகள், கறிக்கடை மற்றும் மீன் வியாபாரிகள், வணிகா்கள் ஆண்டுக்கு ஒரு முறை எடை அளவினை மறுபரிசீலனை செய்து மறுமுத்திரையிட்டு அரசுச் சான்றிதழ் பெற்று எடை அளவுடன் வைத்திருக்க வேண்டும்.
தராசில் எடைமாற்றம் செய்து எடை குறைவாக விநியோகம் செய்தால் சிறைத் தண்டனைக்கு ஆளாக நேரிடும். இனி வருங்காலங்களில் அரியலூா் மாவட்டத்தில் அனைத்து சந்தைகள், மீன் மாா்கெட், கறிக் கடைகள் காய்கறி மாா்கெட்டுகளில் இதுபோன்ற திடீா் ஆய்வுகள் அவ்வப்போது நடத்தப்படும் எனத் தெரிவித்தாா்.