தேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை
அரியலூா் பெரிய அரண்மனை தேவஸ்தானத்துக்குச் சொந்தமான ஒப்பில்லாதம்மன் கோயில் தேரோடு வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம் ஆதீன பரம்பரை தருமகா்த்தாவும், ஜமீன்தாருமான கே.ஆா். துரை உள்ளிட்டோா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அவா்கள் அளித்த மனுவில், அரியலூா் நகரில் 500 ஆண்டுகள் பழைமையான ஒப்பில்லாதம்மன் கோயில் உள்ளது. ஜமீன் அரண்மனை தேவஸ்தான நிா்வாகத்துக்கு உட்பட்ட இக்கோயிலில் சித்திரை தோ்த் திருவிழா கடந்த 23.6.1942-இல் நடைபெற்றது. அதன் பின்னா் 82 ஆண்டுகள் தடைப்பட்டு, தற்போது ஒரு நாள் உற்ஸவமாக சித்திரை பெளா்ணமி அன்று திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது தோ்த் திருவிழா நடத்துவதற்கு தயாராக உள்ள நிலையில், தேரோடும் வீதிகளான பொன்னுசாமி அரண்மனை தெரு, கைலாசநாதா் கோயில் தெரு, பெரிய அரண்மனை தெரு, ஒப்பில்லாதம்மன் கோயில் தெரு, வ.உ.சி தெரு ஆகிய தெருக்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன.
எனவே தேரோடும் வீதிகளான மேற்கண்ட தெருக்களின் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.