BB Tamil 8: மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ராணவ்; ஸாரி கேட்க மறுக்கும் சௌ...
டங்ஸ்டன் சுரங்கம்: மத்திய, மாநில அரசு கடிதங்களில் என்னதான் இருக்கிறது?
அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலத்தில் ஒரு விசாரணை கமிஷனே அமைத்து விசாரித்தாலும்கூட உண்மையில் என்ன நடந்தது என்று மக்களுக்குத் தெரிய வராது போல இருக்கிறது. அந்த அளவுக்கு திமுகவும் அதிமுகவும் மாறிமாறிக் குற்றம்சாட்டிக் கொள்கின்றன.
கனிமவளச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்த, டங்ஸ்டன் சுரங்கம் தோண்ட ஏலமும்விட்ட, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர்களோ இந்தப் பிரச்சினையில் நல்ல முடிவு வரும் என்று தெரிவித்துக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால், தமிழ்நாட்டின் தலை(விதி) மேலாடும் கத்திகளில் ஒன்றாகத் திடீரென அறிமுகமாகி, மக்களைப் பதற வைத்து, ஒருக்காலும் ஏற்க மாட்டோம் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றி (சுரங்கம் வருமானால் முதல்வர் பொறுப்பில் நான் இருக்க மாட்டேன் என்று பேரவைப் பேச்சில் முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிடுகிற அளவுக்குத் தீவிரமாக) மத்திய அரசுக்கு அனுப்ப வைத்திருக்கிறது டங்ஸ்டன் சுரங்கம் - இன்னமும் கத்தி அப்படியேதான் இருக்கிறது! இதுவரையிலும் எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் தோண்டத் திட்டமிடப்பட்ட அரிட்டாபட்டி – நாயக்கர்பட்டி டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக, 2023 அக்டோபர் 3-ல் மத்திய அமைச்சருக்கு தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் கடிதம் எழுதியதாகவும் நவம்பர் 2-ல் மத்திய அரசிடமிருந்து பதில் கடிதம் கிடைக்கப் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
அனேகமாக, 2023-ல் மத்திய அரசு கொண்டுவந்த சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் திருத்தச் சட்ட அமல் தொடர்பாக மாநிலங்களுக்கு மத்திய அரசு எழுதிய கடிதத்துக்கு எதிர்வினையாகவே அக்டோபரில் தமிழ்நாடு கடிதம் எழுதியிருக்க வேண்டும். எதிர்ப்புத் தெரிவித்து எழுதினோம், பொருட்படுத்தாமல் அவர்களாகவே சுரங்க ஏலம் விட்டுவிட்டார்கள் என்று தமிழ்நாடு அரசின் சார்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்தப் பிரச்சினை வெளிப்பட்டதுமே, எதிர்க்கட்சிகள் திசை திருப்புவதாகத் தெரிவித்து அறிக்கையொன்றை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார்:
“கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், முக்கிய கனிமவளங்களை ஏலம் விடுவது தொடர்பாக கனிமக் கொள்கையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை மத்திய அரசு தெரிவித்த உடனேயே, 3.10.2023 ஆம் தேதி மத்திய சுரங்கத் துறை அமைச்சருக்கு நான் எழுதிய கடிதத்தில், தமிழ்நாடு அரசின் எதிர்ப்பினை தெளிவாக தெரிவித்தேன். ஆனால், 2.11.2023 ஆம் தேதி மத்திய சுரங்கத்துறை அமைச்சர் இதற்கு அளித்த பதிலில், உரிய சட்டத் திருத்தங்களை மேற்கொண்ட பிறகே இந்த ஏலம் விடப்படுவதாகவும், தேசிய அளவிலான தேவைகளை கருத்தில்கொண்டு மாநில அரசுகள் இந்த கொள்கைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு நமது எதிர்ப்புகளை நிராகரித்தார்.
“இதனைத் தொடர்ந்து மதுரை மேலூர் பகுதியில் உள்ள நிலங்களைப் பற்றிய விவரங்கள் மத்திய அரசால் கேட்கப்பட்டபோதும், உத்தேசிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள அரிட்டாபட்டி பகுதியானது ஒரு பல்லுயிர்ப் பெருக்க வரலாற்றுத் தலம் என்பதை சுட்டிக்காட்டினோம். இவை எவற்றையுமே கருத்தில் கொள்ளாத மத்திய அரசு ஏலம் விட்டு டங்ஸ்டன் உரிமத்தை மேற்கூறிய நிறுவனத்திற்கு அளித்தது” என்று குறிப்பிட்டிருந்தார் துரைமுருகன்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக, டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளில் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் என விரிவாகப் பேச விவாதங்கள் நடைபெற்றன.
சுரங்கம் தொடர்பாக மத்திய அரசு ஏலம் விட்டாலும் குத்தகைக்கு விடும் அதிகாரம் முதல்வருக்கு உள்ளது. எனவே, உறுதியாக அவர்களுக்குத் தமிழக அரசு குத்தகைக்கு விடாது என்று குறிப்பிட்டார் அமைச்சர் துரைமுருகன்.
விவாதத்தின்போது, அரிய வகை கனிமங்களை மத்திய அரசு மட்டுமே ஏலம் விடும் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அதிமுக ஆதரித்தது. இதன் அடிப்படையில்தான் டங்ஸ்டன் சுரங்க ஏலமும் நடைபெற்றிருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட, ஏல முறையை ஆதரித்துதான் தம்பிதுரை பேசினார்; டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ஆதரித்து அல்ல என்று எடப்பாடி பழனிசாமி மறுத்தார்.
இதற்கு எதிர்வினையாற்றி அறிக்கையொன்றை வெளியிட்ட தம்பிதுரையோ, ‘இந்த மசோதாவின் மீது பேசியபோது மாநிலங்களின் உரிமையைப் பறிக்கக் கூடாதென நான் பேசினேன். பதிலளித்த மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மாநிலங்களின் குழு தரும் ஒப்புதலின்படியே கனிம வளங்கள் ஏலம் விடப்படும்… …தங்களுக்கு வேண்டியவர்களுக்கு ரகசியமாக ஒதுக்கீடு செய்வதைத் தடுப்பதுதான் நோக்கம் என்றார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மசோதா மீதான விவாதத்தில் 2023, ஆக. 2-ல் தாமும் ஜி.கே. வாசனும்தான் பேசியதாகவும் திமுக உறுப்பினர்கள் ஒருவர்கூட பேசவில்லை என்றும் அவைக் குறிப்பிலிருந்தே இதை அறிந்துகொள்ளலாம் என்றும் தெரிவித்த தம்பிதுரை, தமிழ்நாடு அரசு எழுத்துபூர்வமாக ஒப்புதல் அளித்த பிறகே டங்ஸ்டன் சுரங்கத்துக்கு மத்திய அரசு ஏலம் அறிவித்தது என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, டங்ஸ்டன் விவகாரத்தில் நல்ல முடிவு வரும் என்ற தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலையோ, அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக 2023 செப். 15 ஆம் தேதி தமிழக அரசுக்கு மத்திய கனிவள அமைச்சகம் கடிதம் எழுதியதாகவும் 2024 பிப். 8 ஆம் தேதியிட்ட கடிதத்தில் தமிழக அரசும் திட்டம் பற்றிய விரிவான விவரங்களைக் கொடுத்தது; கையெழுத்திட்ட அதிகாரியையும் தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேபோன்ற கருத்தைத்தான் - மாநில அரசிடம் கருத்துக் கேட்டுப் பெறப்பட்ட பிறகுதான் ஏலம் விடப்பட்டதாக – தொடக்கத்திலேயே மத்திய கனிமவளத் துறை அமைச்சகமும் தெரிவித்தது.
டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து, இதுபற்றிய அறிக்கையை மத்திய கனிமளத் துறை அமைச்சகம் வெளியிட்டது.
நாயக்கர்பட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலத்துக்கு முன் தமிழக அரசிடமிருந்து தகவல்கள் பெறப்பட்டன. ஏலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநில அரசு உள்பட எங்கிருந்தும் எவ்வித ஆட்சேபமும் எதுவும் வரவில்லை என்றும் அறிக்கை தெரிவித்தது.
கனிமவளங்கள் சட்டத்தில் (1957) திருத்தம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டு, 2023 ஆக. 17 ஆம் தேதி முதல் திருத்தச் சட்டம் நடைமுறைக்கும் வந்துள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் அரிய வகை உலோகங்கள், தாதுக்கள் விஷயத்தில் மத்திய அரசே ஏலம் விடுவதற்கான அதிகாரம் வழங்கப்படுகிறது.
“இதைத் தொடர்ந்து, நாயக்கர்பட்டி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுரங்க ஏலம் விடப்பட்டது.
“2024 பிப்ரவரியில் சுமார் 20.16 சதுர கி.மீ. பரப்பில் நாயக்கர்பட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலத்துக்காக முன்மொழியப்பட்டது. தமிழக அரசிடமிருந்து தகவல்கள் (இன்புட்ஸ்) பெறப்பட்டன.
“தவிர, அரிட்டாபட்டி கிராமத்தில் 47.37 ஹெக்டேர் பரப்பு கல் குவாரிக்காகப் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு கனிமவள நிறுவனத்துக்கு (டாமின்) 30 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் மாநில அரசு குறிப்பிட்டிருந்தது.
“மேலும் அரிட்டாபட்டியில் 379/1, 379/2 சர்வே எண்ணுள்ள பகுதிகள், மீனாட்சிபுரத்தில் 137 சர்வே எண்ணுள்ள பகுதி ஆகியவை பல்லுயிர்ப் பெருக்க, வரலாற்றுச் சிறப்புமிக்க தலம் என்பது பற்றிய அறிவிக்கையையும் அனுப்பியது.
“அமைச்சகத்துக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி, சுரங்கத்துக்கான மொத்தம் 20.16 சதுர கிலோ மீட்டர் பரப்பில் அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம் பகுதியிலுள்ள 1.93 சதுர கி.மீ. மட்டுமே பல்லுயிர்ப் பெருக்க வரலாற்றுச் சிறப்புமிக்க தலமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது” என்றும் அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
ஏலம் அறிவிக்கப்பட்ட 2024 பிப்ரவரியிலிருந்து முடிவு அறிவிக்கப்பட்ட நவ. 17 வரை ஏலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாநில அரசு உள்பட யாரிடமிருந்தும் எவ்வித ஆட்சேபனையும் வரவில்லை. ஏலத்தைக் கைவிடுமாறு மத்திய அரசை மாநில அரசு கேட்டுக்கொள்ளவுமில்லை என்றும் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
டங்ஸ்டன் சுரங்கம் தோண்டப்படுவதற்கான பகுதியில் பல்லுயிர்ப் பெருக்க வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதி சேர்க்கப்படவில்லை என்றும் இந்த அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது.
ஆக, கனிம வளங்கள் திருத்தச் சட்டம் மற்றும் டங்ஸ்டன் சுரங்க ஏலம் தொடர்பாக, மத்திய அரசு அல்லது மத்திய கனிம வள அமைச்சகம் எத்தனை கடிதங்களை, என்னென்ன கடிதங்களை எழுதியிருக்கிறது?
பதிலளித்து, கருத்து அல்லது எதிர்ப்புத் தெரிவித்து மாநில அரசு எத்தனை கடிதங்களை, என்னென்ன கடிதங்களை எழுதியிருக்கிறது? உண்மையில் என்னதான் நடந்தது?
உள்ளபடியே இந்தக் கடிதங்களில் எல்லாம் என்னதான் எழுதப்பட்டிருக்கிறது? இந்தக் கடிதங்களின் முழு விவரங்களை வெளியிடுவதில் எந்தவித அரசு ரகசியமும் அம்பலமாகிவிடப் போவதில்லை. தவிர, மக்களுக்குத் தெரியக்கூடாத மகா ரகசியம் என்ன இருந்துவிட முடியும்?
ஒருவேளை இந்தக் கடிதப் போக்குவரத்து விவரங்களை முழுமையாக மத்திய, மாநில அரசுகள் முன்வந்தால் வெளிப்படையாகவும் இருக்கும். சுரங்கப் பிரச்சினை பற்றிய உண்மைகளை மக்கள் அனைவரும் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பாக அமையும்.
இதுவரையிலும் டங்ஸ்டன் சுரங்க ஏலம் தொடர்பாக எவ்வித முடிவையும் மத்திய அரசோ, கனிமளத் துறை அமைச்சகமோ அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.