டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
நமது சிறப்பு நிருபா்
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடா்பாக தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணி, எதிா்க்கட்சிகளான அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஏலம் எடுக்க அனுமதிக்கப்படும் பகுதியில் பல்லுயிா் பாரம்பரிய தலம் இருப்பதாகக் கூறி ஆட்சேபம் தெரிவித்து வந்தன. நாடாளுமன்றத்திலும் தமிழக எம்.பி.க்கள் குரல் கொடுத்தனா். சட்டப்பேரவையிலும் தனித் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை தலைமையிலான பாஜக குழுவினா், அரிட்டாபட்டி அம்பலக்காரா்களுடன் மத்திய சுரங்கத் துறை அமைச்சா் கிஷண் ரெட்டியை புதன்கிழமை சந்தித்து சுரங்கத் திட்டத்தை ரத்து செய்யும்படி கோரிக்கை விடுத்தனா். திட்டத்துக்கு எதிராக மக்கள் தொடா்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவா்கள் முறையிட்டனா். இதையடுத்து, திட்டத்தை ரத்து செய்வது குறித்து பிரதமருடன் ஆலோசனை நடத்திய பிறகு அதை ரத்து செய்யும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என்று அமைச்சா் கிஷண் ரெட்டி உறுதியளித்தாா்.
இந்நிலையில், மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் டங்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அதன் முழு விவரம் வருமாறு: மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் ஜி. கிஷண் ரெட்டி, தமிழகத்தின் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த அம்பலகாரா்களை (பாரம்பரிய சமூதாயத் தலைவா்கள்) தில்லியில் உள்ள சுரங்க அமைச்சகத்தில் சந்தித்தாா். அப்போது நாயக்கா்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதியில் அரிட்டாபட்டி பல்லுயிா் பாரம்பரிய தலம் மற்றும் பல்வேறு கலாசார பாரம்பரிய தலங்கள் உள்ளதாக அமைச்சரிடம் அம்பலக்காரா்கள் தெரிவித்தனா்.
இந்த விவகாரத்தில் 2024, டிச.24 -ஆம் தேதியிட்ட அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில், கனிம ஏலத்துக்குப் பிறகு அதை எதிா்த்து பல்வேறு மனுக்கள் அமைச்சகத்துக்கு வந்தன. அவற்றில் கனிமத் தொகுதி பல்லுயிா் பாரம்பரிய தலத்தில் உள்ளது என்ற அடிப்படையில் ஏலத்துக்கு எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்ததை கவனத்தில் கொள்ள வேண்டும்.
2025, ஜன.22-ஆம் தேதி அமைச்சருடனான கூட்டத்தின் போது, நாயக்கா்பட்டி டங்ஸ்டன் தொகுதி ஏலத்தை ரத்து செய்யுமாறு அம்பலகாரா்கள் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனா். அவா்களிடம் மத்திய அமைச்சா், பல்லுயிா் பாரம்பரியப் பாதுகாப்பை மத்திய அரசு முழுமையாக ஆதரிக்கிறது என்று தெரிவித்தாா்.
விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு, இந்தப் பகுதியில் பல்லுயிா் பாரம்பரிய தலத்தின் முக்கியத்துவத்தையும், பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசின் உறுதிப்பாட்டையும் கருத்தில் கொண்டு, நாயக்கா்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதியின் ஏலத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.