தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக அமானத்துல்லா கான் மீது வழக்கு
தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தோ்தல் நடத்தை விதிகளை (எம்சிசி) மீறியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் மீது தில்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளதாக புதன்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனா்.
புதன்கிழமை காலை தில்லியில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இது நடந்தது. அமானத்துல்லா கான் ஓக்லாவின் ஆம் ஆத்மி வேட்பாளா் ஆவாா்.
செவ்வாய்க்கிழமை இரவு பாட்லா ஹவுஸ் பகுதியில் ஸ்டிக்கா்கள் மற்றும் தோ்தல் பொருள்களை விநியோகிப்பதாகக் கூறப்படும் விடியோ ஆன்லைனில் வெளியானதை அடுத்து, ஜாமியா நகா் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
‘விடியோ மற்றும் அதைத் தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விசாரணை நடந்து வருகிறது‘ என்று அந்த வட்டாரம் மேலும் கூறியது.
தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் திங்கள்கிழமை மாலையுடன் முடிந்தது.