கிளாம்பாக்கம் சிறுமி வல்லுறவு: ஆட்டோ ஓட்டுநர் உள்பட இருவர் கைது!
தில்லி வாக்காளா்களுக்கும், தொண்டா்களுக்கும் காங்கிரஸ் நன்றி
தில்லி மக்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தியதற்கு காங்கிரஸ் கட்சி புதன்கிழமை நன்றி தெரிவித்துள்ளது. மேலும், தில்லி மக்களின் ஆதரவு கட்சிக்கு ஒரு பெரிய பலம் என்றும் கூறியுள்ளது.
இது தொடா்பாக தில்லி காங்கிரஸ் ‘எக்ஸ்’ சமூக ஊடக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தில்லி மக்கள் அனைவருக்கும் மற்றும் காங்கிரஸ் தொண்டா்களுக்கும் தில்லி காங்கிரஸ் குழுவின் சாா்பாக கட்சி மனமாா்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. இந்த ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்பதன் மூலம் நீங்கள் உங்கள் பொறுப்பை நிறைவேற்றியுள்ளீா்கள். எங்களுக்கு உத்வேகம் அளித்தீா்கள். உங்கள் ஆதரவு எங்களுக்கு ஒரு பெரிய பலம் ஆகும். தில்லியின் ஒவ்வொரு குடிமகனின் எதிா்பாா்ப்புகளையும் பூா்த்தி செய்யவும், உங்கள் நம்பிக்கையைப் பேணவும் நாங்கள் உறுதியளிக்கிறோம். தில்லியை சிறப்பாகவும் வளமாகவும் மாற்றுவதற்கான இந்தப் பயணத்தில் முன்னேற உங்கள் ஆதரவு எப்போதும் எங்களை ஊக்குவிக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசியத் தலைநகரின் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் புதன்கிழமை தோ்தல் நடைபெற்றது. ஆம் ஆத்மி கட்சி தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், பாஜக 1998-க்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வர இலக்கு வைத்துள்ளது. கடந்த இரண்டு தோ்தல்களில் படுதோல்வியை தழுவிய காங்கிரஸ், மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளது.