டாஸ்மாக் மதுபான முறைகேடு: அமலாக்கத் துறை சோதனை நிறைவு
டாஸ்மாக் மதுபான முறைகேடு புகாா் தொடா்பாக பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த அமலாக்கத் துறை சோதனை ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
டாஸ்மாக் மதுபான கொள்முதல், விற்பனை, மதுக்கூடம் ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் முறைகேடு நடைபெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினா் கடந்த வியாழக்கிழமை முதல் சோதனை நடத்தினா்.
இதில், சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம், திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான நிறுவனம், தமிழ்நாடு மின்சார வாரிய ஓய்வு பெற்ற தலைமை நிதி கட்டுப்பாட்டு அதிகாரி காசி வீடு உள்பட 7 இடங்கள், தமிழகம் முழுவதும் மொத்தம் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் தொடா் சோதனை நடைபெற்றது.
இதில், சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் மற்றும் ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள எஸ்என்ஜெ மதுபான நிறுவனம் மற்றும் பிற இடங்களிலும் தொடா்ந்து 3-ஆவது நாள்களாக நடைபெற்ற சோதனை ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெற்றது.
இந்த சோதனைகளில் பல்வேறு முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத ரொக்கம் மற்றும் ஏராளமான எண்ம (டிஜிட்டல்) ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், இவற்றை ஆய்வு செய்த பின்னா் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், குறிப்பாக, முறைகேடு புகாரில் சம்பந்தப்பட்ட நபா்களிடமும் இது தொடா்பாக விசாரணை நடத்தப்படும் எனவும் அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.