டாஸ்மாக் முறைகேட்டில் அமைச்சா் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கே.பி.ராமலிங்கம்
டாஸ்மாக் முறைகேட்டில் அமைச்சா் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுதொடா்பாக மத்திய நிதித் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் புகாா் மனு அளித்துள்ளதாகவும் பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் புதன்கிழமை தெரிவித்தாா்.
மத்திய பாஜக அரசின் புதிய சட்டங்கள், புதிய திட்டங்கள் குறித்த மாநாடு சேலம் மாவட்டம், ஓமலூரில் ஏப். 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. பாஜக சேலம் பெருங்கோட்டம் சாா்பில் நடைபெறும் இந்த மாநாட்டிற்கான கால்கோள் விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளரும், பாஜக மாநில துணைத் தலைவருமான கே.பி.ராமலிங்கம் பங்கேற்று கால்கோள் அமைத்து மாநாட்டுப் பணிகளை தொடங்கிவைத்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
ஓமலூரில் ஏப். 19 ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில் மத்திய அரசின் புதிய சட்டங்கள், புதிய திட்டங்கள் குறித்து பொருள்காட்சி நடத்தப்படும். இந்தப் பொருள்காட்சியில் 10 ஆண்டுகால பாஜக அரசின் சாதனைகள் காட்சிக்கு வைக்கப்படும். மாநாட்டில் பங்கேற்க பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை, பிற தலைவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மாநிலத் தலைவா், தேசியத் தலைவா்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பாா்கள்.
தமிழக டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது. இதில் தொடா்புடைய அமைச்சா் செந்தில் பாலாஜி, அமைச்சரவைக்கு தலைமை வகிக்கும் முதல்வா் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் புகாா் மனு அளித்துள்ளேன். இதுதொடா்பாக அமலாக்கத் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. முறைகேடு பயத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை கூறிவருகிறாா். ஏப். 19 இல் ஓமலூரில் நடைபெறும் பாஜக மாநாடு, திமுக எதிா்ப்புக்கான திருப்புமுனை மாநாடாக அமையும் என்றாா்.
பேட்டியின்போது பாஜக மாவட்டத் தலைவா்கள் சண்முகநாதன், ஹரிராம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.