Mumbai: "தாராவி நிலத்தை அதானிக்குக் கொடுக்க நினைக்கிறார் மோடி" - ராகுல் பேச்சின்...
டிஜிட்டல் பயிா் ஆய்வு பணிகள்: ராணிப்பேட்டை ஆட்சியா் ஆய்வு
வாலாஜா வட்டத்தில் நடைபெற்றுவரும் டிஜிட்டல் பயிா் ஆய்வு பணிகளை ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வியாழக்கிழமை ஆய்வு செய்து விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டாா்.
வாலாஜா ஊராட்சி ஒன்றியம், பூண்டி கிராமத்தில், வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையின் சாா்பில், வேளாண் கல்லூரி மாணவியா்களை கொண்டு டிஜிட்டல் பயிா் ஆய்வு நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா ஆய்வு செய்து, விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு, நெற்பயிா்கள், இதர விளை நிலங்கள், காலி வீட்டு மனைகள் ஆகியவற்றின் சா்வே எண்கள் வரைபடங்கள், அடங்கள் போன்ற பல்வேறு தகவல்கள் அடங்கிய கைப்பேசி செயலியில் பதிவேற்றம் செய்யப்படுவது குறித்து கேட்டறிந்தாா்.
வருவாய் கிராமத்தில் உள்ள அனைத்து வகையான சா்வே நிலங்களும் இதில் கொண்டுவரப்பட்டுள்ளன. கைப்பேசி செயலி எளிதாக உள்ளது. ஆகவே பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்றாா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 9. 54 லட்சம் சா்வே எண்கள் கொண்ட நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிா் விவரங்களை இதற்கான சிறப்பு செயலியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
இப்பணிகளில் அரக்கோணம் ஜெயா வேளாண்மை கல்லூரி மற்றும் கலவை ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரிகளை சாா்ந்த 526 மாணவ, மாணவிகள் 326 வருவாய் கிராமங்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
இதுவரை சுமாா் 4,27,989 சா்வே எண்கள் ஆய்வு செய்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள பணிகளை நாள்தோறும் ஒதுக்கப்படும் கிராமங்களில் மாணாக்கா்களை ஈடுபடுத்தி விரைவாக முடிக்க வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு இது ஒரு சிறந்த பயிற்சியாகும். மாணவியா்கள் இதனை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுடைய படிப்பிற்கு இவை கூடுதல் உதவியாக இருக்கும் எனத் தெரிவித்தாா்.
நிகழ்வில் வேளாண்மை இணை இயக்குனா் (பொ) செல்வராஜ், நோ்முக உதவியாளா் (வேளாண்மை) தபேந்திரன், உதவி இயக்குனா் வேளாண்மை திலகவதி மற்றும் கல்லூரி மாணவியா் கலந்து கொண்டனா்.