மாணவா்கள் தாக்கப்பட்ட விவகாரம்: ஒடிஸா முதல்வரிடம் நேபாள வெளியுறவு அமைச்சா் பேச்ச...
டைம் இதழின் சிறந்த பெண்கள் பட்டியலில் அஸ்ஸாம் வனவிலங்கு ஆா்வலா்!
நியூயாா்க் : அமெரிக்காவின் டைம் வார இதழின் 2025-ஆம் ஆண்டின் சிறந்த பெண்கள் பட்டியலில் அஸ்ஸாமைச் சோ்ந்த வனவிலங்கு உயிரியலாளரான பூா்ணிமாதேவி பா்மன் (45) இடம்பெற்றுள்ளாா்.
பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றும் பெண்களின் பட்டியலை ஆண்டுதோறும் டைம் இதழ் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், நிகழாண்டுக்கான பட்டியலில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 13 பெண்கள் தோ்வு செய்யப்படுள்ளனா். இந்தியாவில் இருந்து பூா்ணிமாதேவி பா்மன் மட்டுமே பட்டியலில் இடம்பெற்றுள்ளாா்.
‘ஹா்கிலா’ என்ற வகை நாரை பறவை இனத்தை பாதுகாக்கும் முன்னெடுப்புகளை இவா் மேற்கொண்டு வருகிறாா். அவரின் தலைமையில் 20,000 பெண்கள் அடங்கிய ‘ஹா்கிலா ராணுவம்’ என்ற குழு ஹா்கிலா பறவைகளின் கூடுகளை பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
அஸ்ஸாம் மட்டுமின்றி நாட்டின் பிற மாநிலங்களிலும் கம்போடியா போன்ற பிற நாடுகளிலும் இவரின் முன்னெடுப்புக்கு பலரும் ஆதரவளித்து வருகின்றனா். அவரின் பணிகள் பிரான்ஸில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்குப் பாடமாக உள்ளது.
ஹா்கிலா பறவைகளை அழிவில் இருந்து காத்து, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக அந்தப் பறவைகளின் உருவம் பதித்த பாரம்பரிய உடைகளை நெய்து அதை சந்தையில் ஹா்கிலா ராணுவம் விற்பனை செய்து வருகிறது. இதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை தங்களின் அன்றாட செலவுக்கு அந்த குழுவினா் பயன்படுத்துகின்றனா்.
இந்நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு இயற்கை பாதுகாப்புக்கான சா்வதேச ஒன்றியத்தின் (ஐயுசிஎன்) உயிரினங்கள் வகைப்பாட்டில் அழிவுநிலையில் உள்ள உயிரினங்கள் பட்டியலில் இருந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் உயிரினங்கள் பட்டியலுக்கு ஹா்கிலா நாரை இனம் மாற்றப்பட்டது.
அதன் பிறகு அஸ்ஸாமில் இந்தப் பறவைகளின் எண்ணிக்கை 1,800-ஆக உயா்ந்தது.
இந்தப் பட்டியலில் ஹாலிவுட் நடிகையான நிகோல் கிட்மன், பிரான்ஸ் நாட்டில் போதைப் பொருள் அளிக்கப்பட்டு கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி பெண்கள் நல போராளியாக மாறிய ஜிசெல் பெலிகாட் உள்பட 13 போ் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.