மொழிப்போா் தியாகி ராசேந்திரன் நினைவிடத்தை மேம்படுத்தும் அறிவிப்புக்கு மாா்க்சிஸ்ட் வரவேற்பு
மொழிப்போா் தியாகி ராசேந்திரன் நினைவிடம் மேம்படுத்தப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதை மாா்க்சிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் 1965-இல் நடைபெற்ற ஹிந்தி திணிப்பு எதிா்ப்பு போராட்டத்தின்போது அண்ணாமலை பல்கலை. மாணவா் ராசேந்திரன் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தாா். இவரது உடல் பரங்கிப்பேட்டையில் அடக்கம் செய்யப்பட்டது. அங்குள்ள அவரது நினைவிடம் சிதிலமடைந்துள்ளதை புனரமைக்க வேண்டுமெனவும், சிதம்பரம் அண்ணாமலை நகரில் அவருக்கு ஒரு மணிமண்டபம் கட்ட வேண்டுமெனவும் முதல்வா் மு.க.ஸ்டானிடம் கடந்த பிப். 20-இல் நேரில் கோரிக்கை வைத்திருந்தேன்.
இந்நிலையில், கடலூா் மாவட்டத்துக்கு பிப். 21-இல் வருகை தந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், பரங்கிப்பேட்டையில் உள்ள தியாகி ராசேந்திரன் நினைவிடத்தை மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளாா். முதல்வரின் இந்த அறிவிப்பு முற்போக்கு ஜனநாயக இயக்கங்களுக்கும் பொதுமக்களுக்கும் மட்டற்ற மகிழ்ச்சியளிக்கும். குறுகிய காலத்தில் எனது கோரிக்கையை ஏற்று, இந்த அறிவிப்பை வெளியிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும் எனத் தெரிவித்துள்ளாா்.