மழையால் கைவிடப்பட்ட போட்டி; ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்!
ட்ரோன்கள்.. மோப்ப நாய்கள்.. 100 போலீஸ்..! புணே வன்கொடுமை குற்றவாளி சிக்கியது எப்படி?
பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பேருந்துக்குள் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 75 மணி நேரத்தில் காவல்துறையினர் குற்றவாளியைப் பிடித்துள்ளனர்.
வன்கொடுமை
புணேயின் ஸ்வா்கேட் பேருந்து நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பேருந்துக்காக காத்திருந்த 26 வயதுப் பெண்ணை ஏமாற்றி அழைத்துச் சென்ற ஒரு நபா், தனி இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்துக்குள் வைத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டுத் தப்பினாா். இந்தியா முழுவதும் அதிா்ச்சி வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட தத்தாத்ரேய ராமதாஸ் கடே (37) எவ்வாறு சிக்கினார் என்பதைப் பற்றி காவல் துறையினர் விளக்கமளித்துள்ளனர்.
தேடுதல் வேட்டை
100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர், மோப்பநாய் படைப் பிரிவு, ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டு 75 மணி நேரத்தில் குற்றவாளியைப் பிடித்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், “தத்தாத்ரேவைப் பிடிப்பதற்கு அவரது மாற்று சட்டை மட்டுமே போதுமானதாக இருந்தது. குற்றத்தில் ஈடுபட்ட அவர் அவருடைய வீட்டுக்குச் சென்று தான் ஒரு குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், காவல் துறையிடம் சரணடைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர் தன்னுடைய சட்டையை அங்கு போட்டுவிட்டு வேறொரு சட்டையை மாட்டிக்கொண்டு அங்கிருந்து அருகில் உள்ள கரும்பு காட்டுக்குள் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார்.
பெண் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு அடுத்த நாளான புதன்கிழமை மாலை புணேவுக்கு 100 கி.மீ.க்குள் 8 அணிகளாகப் பிரிந்து 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ட்ரோன்கள் மற்றும் மோப்ப நாய்கள் மூலம் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். மேலும், அவர் குறித்து தகவல் தெரிவித்தாலோ அல்லது பிடித்துக்கொடுத்தாலோ ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி அவரது சகோதரரைப் பிடித்து அவரிடமும் கடே குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் மாற்றிய சட்டையை பெற்றுக்கொண்டு அதிலிருந்த செண்ட் வாடையை மோப்ப நாயிடம் காட்டி தேடுதலில் இறங்கினர் போலீஸார்.
அவரைக் கண்டுபிடித்த பின்னர் ஸ்வா்கேட் காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிறப்பு புலனாய்வுப் பிரிவு கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதையும் படிக்க: தில்லி: ஐசியு, பிணவறை இல்லாத மருத்துவமனைகள்!
யார் இந்த தத்தாத்ரேய ராமதாஸ் கடே?
ஷிரூரைச் சேர்ந்த தத்தாத்ரேய ராமதாஸ் கடே மீது அஹில்யாநகர் மாவட்டத்தில் உள்ள ஷிரூர் மற்றும் ஷிகார்பூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் மீது 6-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர் மீது பணம் பறித்தல், திருட்டு, கொள்ளை வழக்குகளும் உள்ளன.
இவர் தவணை முறையில் ஒரு கார் வாங்கி அதை பதிவு செய்யாமல் டாக்ஸியாக ஓட்டிவந்துள்ளார். இவருடைய இலக்குகள் எல்லாம் வயதான பெண்கள்தான். அவர்கள் காரில் ஏறியதும் யாருமில்லாத ஒதுக்குப்புறமாக இடத்துக்கு அழைத்துச் சென்று அவர்களை மிரட்டி அவர்களின் நகை, பணம் ஆகியவற்றைக் கொள்ளையடிப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார். அந்த காலகட்டத்தில் அவரிடமிருந்து 140 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
2020 ஆம் ஆண்டு கொள்ளை வழக்கில் 6 மாதங்கள் சிறையிலும் கடே இருந்துள்ளார். குற்ற வழக்குகளைத் தவிர்த்து கடே அரசியலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். சமீபத்தில் மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற பேரவைத் தேர்தலிலும் ஒரு முக்கிய அரசியல் தலைவருடன் இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகியுள்ளன. அதுமட்டுமின்றி, அவர் குணாட் கிராமத்தின் சங்கர்ஷ்-முக்தி சமிதியில் ஒரு இடத்தில் போட்டியிட்டார். ஆனால் அதில் அவர் வெற்றிபெறவில்லை.
வன்கொடுமை நடப்பதற்குமுன் கடே, ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிந்துள்ளார். மேலும், தன்னை ஒரு காவல் அதிகாரி போல காட்டிக்கொண்டுள்ளார். இதனை, அங்கிருந்த கண்காணிப்பு கேமராக் காட்சிகள் உறுதிபடுத்தியுள்ளன.
யார் அந்தப் பெண்?
26 வயதான வன்கொடுமைக்கு ஆளான அந்தப் பெண் மருத்துவத் துறையில் பணிபுரிந்து வருகிறார். இவர் காலை 5.45 மணியளவில் பால்தான் செல்லும் பேருந்துக்காக சாதரா மாவட்டத்தில் உள்ள ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் காத்திருந்துள்ளார். அப்போது அவர் அருகில் சென்ற கடே “சகோதரி...” என அழைத்து பேருந்து இங்கே நிற்காது, அது வேறு நடைமேடையில் நிற்கும் என அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அவர் அவளை ஒரு காலியான ஷிவ் ஷாஹி ஏசி பேருந்திற்கு அழைத்துச் சென்று குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாக அந்தப் பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பரபரப்பான புணே நகரத்தின் பேருந்து நிலையத்திலேயே பெண்ணை வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சி வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிக்க: புணே பாலியல் வன்கொடுமை: குற்றவாளி கைது!