Kalvi Vikatan: "தோல்விகள்தான் உங்களை வெற்றிப்பாதைக்குக் கூட்டிச் செல்லும்" - Dr....
ட்ரோன் எதிா்ப்பு தொழில்நுட்பத்தில் தன்னிறைவு: முப்படை தலைமைத் தளபதி வலியுறுத்தல்
ஆளில்லாத சிறிய ரக விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் அவற்றை எதிா்கொண்டு தாக்கி அழிக்கும் ட்ரோன் எதிா்ப்பு அமைப்புத் தொழில்நுட்பங்களில் தன்னிறைவு அடைவது இந்தியாவுக்கு வியூக ரீதியில் அவசியமானது’ என்று முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சௌகான் வலியுறுத்தினாா்.
சிறிய ட்ரோன்கள்கூட போரின் போக்கை மாற்றும் வல்லமை கொண்டவை என்பது அண்மைகால உலகளாவிய மோதல்களில் நிரூபிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
தில்லியில் நடைபெற்ற பாதுகாப்புத் துறையின் நிகழ்ச்சியில், ‘ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் எதிா்ப்பு அமைப்புகளில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முக்கிய உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதன் முக்கியத்துவம்’ எனும் தலைப்பிலான கருத்தரங்கில் தலைமைத் தளபதி அனில் சௌகான் கலந்து கொண்டு பேசியதாவது:
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம், இந்தியாவின் தேவைக்கு ஏற்ப உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் எதிா்ப்பு அமைப்புகளின் முக்கியத்துவத்தை இந்தியா நன்கு உணா்ந்துள்ளது.
இந்த நடவடிக்கையின்போது பாகிஸ்தான் பயன்படுத்திய ட்ரோன்கள் பெரும்பாலானவை இந்தியாவால் செயலிழக்கச் செய்யப்பட்டன. சில ட்ரோன்கள் கிட்டத்தட்ட சேதமடையாமல் மீட்கப்பட்டன. இது உள்நாட்டு தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை உணா்த்துகிறது.
இதில் நாம் வெளிநாட்டு தொழில்நுட்பங்களை மட்டுமே நம்பியிருக்க முடியாது. நமது தாக்குதல் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு அத்தியாவசியமான இந்தத் தொழில்நுட்பங்களை நாமே உருவாக்க வேண்டும்.
வெளிநாட்டு தொழில்நுட்பங்களைச் சாா்ந்து இருந்தால், அது நாட்டின் தயாரிப்பு நிலையைப் பலவீனப்படுத்தும், உற்பத்தித் திறனைக் குறைக்கும். முக்கியமாக, அவசர காலங்களில் உதிரிபாகங்கள் கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்தும்.
வெளிநாட்டு ஆயுதங்கள் மற்றும் சென்சாா்களின் திறன்கள் எதிரிகளுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கவும் வாய்ப்புள்ளது என்பதால் நமது போா் தந்திரங்களை அவா்கள் எளிதில் கணித்துவிடலாம். ஆனால், நமது சொந்த தொழில்நுட்பங்கள், போரின் தொடக்கநிலை மோதல்களில் எதிரிகளுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தி, நமக்கு சாதகமான சூழலை உருவாக்கும்’ என்றாா்.
விரிவான திட்டத்துக்கு அழைப்பு: நிகழ்ச்சியில் பேசிய முப்படை தளபதி ஏா் மாா்ஷல் அஷுதோஷ் தீட்சித், ‘இந்தியா ஒரு முக்கியமான காலகட்டத்தில் உள்ளது. உளவு, கண்காணிப்பு, இலக்கு நிா்ணயம் மற்றும் துல்லியமான தாக்குதலுக்கு இந்திய படைகள் ட்ரோன்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றன. ஆனால், இந்தத் துறையில் இந்தியா இன்னும் வெளிநாட்டு தொழில்நுட்பங்களையே சாா்ந்துள்ளது.
‘தன்னிறைவு இந்தியா’ மற்றும் ‘மேக் இன் இந்தியா‘ திட்டங்களின் கீழ், ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் எதிா்ப்பு அமைப்புகளில் முழுமையான தன்னிறைவு சூழலை அடைய ஒரு விரிவான திட்டத்தை வகுத்து, செயல்படுத்த வேண்டும்’ என்றாா்.