விமான விபத்துக்கு விமானி காரணமா? அமெரிக்க செய்தித்தாளின் கருத்துக்கு ஏஏஐபி எதிர்...
விருதுநகர்: செவல்பட்டி பட்டாசு ஆலை விபத்து; கழிவு வெடிகள் வெடித்ததில் ஒருவர் படுகாயம்; என்ன நடந்தது?
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள துலுக்கன்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி என்பவருக்கு வெம்பக்கோட்டை அருகில் உள்ள செவல்பட்டியில் சரவணா பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது.
மாவட்ட வருவாய் அலுவலர் அனுமதி பெற்ற இந்தப் பட்டாசு ஆலையில் சிறிய ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. பத்துக்கும் மேற்பட்ட அறைகளில் சுமார் இருபதுக்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிப்பில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சிவகாசி அருகே உள்ள கொங்கலாபுரத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் இன்று மருந்து கலவை தயார் செய்துவிட்டு உடலின் மேல் படர்ந்துள்ள மருந்து கலவை அகற்றுவதற்காக பட்டாசு ஆலைக்கு வெளியே குளியல் தொட்டி அருகே சென்றபோது எதிர்பாராத விதமாகத் தடுமாறி விழுந்துள்ளார்.
அந்த இடத்தில் கழிவு வெடிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது உடலிலிருந்த மருந்து உராய்வு ஏற்பட்டதில் கழிவு வெடிகளில் எதிர்பாராத விதமாகத் தீப்பிடித்ததில் கழிவு பட்டாசுகள் வெடித்துச் சிதறின.
இதில் ஜெயராமன் படுகாயம் அடைந்தார். மற்ற தொழிலாளர்கள் உடனடியாக ஜெயராமனை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வெம்பக்கோட்டை தீயணைப்புப் படை வீரர்கள் தீயை அணைத்தனர். மேலும் விபத்து குறித்து செவல்பட்டி கிராம நிர்வாக சீனிராஜ் கொடுத்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.