லண்டனில் இந்தியா-பிரிட்டன் பொருளாதாரப் பேச்சுவாா்த்தை: நிா்மலா சீதாராமன் பங்கேற்...
தங்க நகைக் கடனுக்கு புதிய விதிமுறை: விழிபிதுங்கும் மக்கள்; RBI உத்தரவால் யாருக்கு லாபம்?
ரிசர்வ் வங்கியின் புதிய விதி
வங்கிகளில் பெற்ற தங்க நகைக் கடன் தொகைக்கு ஆண்டுதோறும் வட்டித் தொகையை மட்டும் செலுத்தி மறுஅடகு வைக்கலாம் என்றிருந்த நிலையில், தற்போது அசலுடன் வட்டியையும் சேர்த்து செலுத்த வேண்டும், என்பதுதான் ரிசர்வ் வங்கியின் புதிய விதி. இதனால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தூத்துக்குடியைச் சேர்ந்த விவசாயி வரதராஜனிடம் பேசினோம், ”மருத்துவச் செலவு, கல்விச்செலவு மற்றும் அவசரத் தேவைகளுக்கு கைகொடுப்பது தங்கநகைக் கடன்தான். தனியார் வட்டிக்கடை, தனியார் அடகுக்கடைகளை விட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகளில் வட்டிக்குறைவு என்பதும் ஒரு காரணம். கையில் பணம் கிடைக்கும் வரை வட்டியை மட்டும் கட்டிவிட்டு மறு அடகு வைக்கலாம், நகையும் பாதுகாப்பாக இருக்கும் என நிம்மதியாக இருந்த நிலையில் தலையில் இடியாக வந்து இறங்கியிருக்கிறது ரிசர்வ் வங்கியின் புதிய விதி.
இது சாமானியமக்கள், சிறுகுறு விவசாயிகள், சிறுகுறு வணிகர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய விதி, ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிக கவலையையும் மன உளைச்சலையும் தந்துள்ளது.

இதனால், தங்களின் நகைகள் ஏலத்துக்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காக அதிக வட்டிக்கு வெளியில் கடன் வாங்கி நகையை மீட்டு மீண்டும் அடகு வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அசலை வட்டியுடன் செலுத்த அவசரத்திற்கு வட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டிக்கு பணம் வாங்க ஆளாவதுடன் பணம் தருபவர்களுக்கு தனியாக கமிஷனும் தர வேண்டியுள்ளது. பணம் கிடைக்காமல் வேறு வழியே இல்லாமல் தனியார் அடகு கடைகளை நாடினால் நகையை மீட்டு அவர்களின் அடகுக்கடைகளில் வங்கியை விட கூடுதல் வட்டிக்கு அடகு வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் அந்த கடன் தொகையையும் செலுத்த முடியாமல் திணறும் போது எங்களது நிலையை புரிந்துகொண்டு அவர்களே அடிமட்ட தொகைக்கு கிராம் எடை போட்டு அவர்களே நகைகளை அபகரித்துக் கொள்வார்கள். இனி என்ன செய்யப்போகிறோம் என்பது தெரியவில்லை” என்றார் கவலையுடன்.
பொருளாதார ஆலோசகர் சுந்தரி ஜெகதீசன்
இது குறித்து கேட்டபோது பொருளாதார ஆலோசகர் சுந்தரி ஜெகதீசன் கூறுகையில், "தங்கத்தின் மதிப்பு உயர்ந்துள்ள சமீப காலங்களில், அடகு பெறப்பட்ட நகையின் மதிப்பு உயர்ந்திருக்கும் என்பதால், பழைய கடன் அடைபட்டதுடன் சற்று அதிக தொகை கூட மறு அடகு வைப்பதால் கூடுதல் கடன் தொகை கூட கிடைத்து வந்தது. இப்படி எதிர்பார்த்து வந்த அனைவருக்கும் அதிர்ச்சிதான்.
கோவிட் காலத்தில் ஆகஸ்ட் 2020-ல் பணமில்லாமல் மக்கள் தவித்ததைக் கண்ட மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் நகைக்கடன்களில் தாராளம் காட்டின.
நகைக்கடன்கள் வழங்கிட நிதி நிறுவனங்களுக்கு அதிக சுதந்திரம் வழங்கியதுடன், வழக்கமான 75% கடன் விகிதத்தை 90% ஆக மாற்ற அனுமதி வழங்கின. மார்ச் 2021 வரை ஒரு கிராம் தங்கத்தின் மதிப்புக்கு 90% அளவு வரை கடன் வழங்கலாம் என்றிருந்தது.
லாபத்தை அதிகரிக்க வழி தேடி வந்த நிதி நிறுனவங்களுக்கு நகைக்கடன் பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது.
25% வரை கந்துவட்டிக் கடன் பெற்று நொந்து போயிருந்த மக்களுக்கும் மகிழ்ச்சியை தந்தது. வங்கிகளில் வட்டி 12% முதல் 15% வரையாக இருந்ததால் மக்கள் வங்கிகளில் பெருமளவில் கடன் பெறத் தொடங்கினர்.
நகைக்கடன்கள், கடந்த 3 வருடங்களில் 23% வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்தன. கூடவே விதிமீறல்களும் நடந்தன. ஒருவருக்கு ஒரே வருடத்தில் பல கடன்கள் வழங்கப்பட்டன.
வாரக்கடனுக்கான நகைகளை ஏலம் விடும்போது நகையின் உரிமையாளருக்கு தகவல் தெரிவிப்பதில்லை. அதில் கடன் தொகை போக மீதம் இருக்கும் பணத்தை உரிமையாளருக்கு தருவதில் இழுத்தடிப்பு.
பல நகைக்கடன்கள் ஒரே நாளில் கொடுக்கப்பட்டு அதே நாளில் மூடப்பட்டிருந்தது வங்கி ஆடிட் துறையின் கழுகுப்பார்வையில் சிக்கியது. இவற்றையெல்லாம் அறிந்த ரிசர்வ் வங்கி கடந்த 2024 செப்டம்பரில் நிரந்தரப் பசுமையாக்கல் நடைமுறையை நிறுத்தும்படியும், மூன்று மாதங்களில் தங்கள் கணக்குகளை சரி செய்யும்படியும் நிதி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.
ஆனால் கடன் வாங்கிய சாமானிய மக்களுக்கு இந்த தகவல் சேரவில்லை. யாரிடமாவது கடன் வாங்கி பழைய நகைக்கடனை அடைக்கலாம் என்றாலும் எளிய மக்களின் சொந்த பந்தங்களிடம் இவ்வளவு தொகை இருக்குமா?

தங்கள் நகைகளை விற்று கடனை அடைக்கும்படி நிதிநிறுவனங்களிடம் வேண்டினாலும், அது உடனே நடக்கூடியது அல்ல. நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் ஏராளம் என்பதால் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரைகூட ஆகலாம்.
அதுவரை வட்டிவிகிதம் பல மடங்கு ஏறும். நகைக்கடன் தரும் தனியார் நிதிநிறுவனங்களை நாடினாலும் மீட்கப்பட்ட நகைகளை அவர்களிடமே அடகு வைக்க வேண்டும். அதற்கான வட்டி, கட்டணங்கள் எல்லாம் வேற லெவல். அடகு வைக்கப்பட்ட நகைகள் கை நழுவிப்போகும் அபாயம் உண்டு. மாதந்தோறும் இ.எம்.ஐ மூலம் கடன் தொகையை செலுத்துதல் போன்ற சில சலுகைகளை அளித்தால் மட்டுமே மக்கள் நிம்மதியடைய முடியும்” என்றார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்:
ரிசர்வ வங்கியின் இந்த புதிய விதி குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் மீடியாக்கள் கேள்வி எழுப்பியபோது “வங்கிகளின் நலனுக்காகத்தான் இந்த புதிய விதி அமல்படுத்தப்பட்டுளது” என ஒற்றை வரியில் கூறிச் சென்றார்.
வைகோ, சீமான் உள்ளிட்ட்ட பல தலைவர்களும் இந்த நிபந்தனையை திரும்பப்பெற வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
சாமானிய மக்களை பாதிக்கும் - சு.வெங்கடேசன்
சாமானிய மக்களை பாதிக்கும் இந்த இந்த திடீர் உத்தரவு குறித்து சு.வெங்கடேசன் எம்.பியிடம் பேசினோம், “ஆம், இது மோசமான உத்தரவு. ஏழை எளிய மக்களை மிகவும் பாதிக்கும். நகையை மீட்க முடியாமல் கந்துவட்டிக்காரர்களிடம் கடன் வாங்க வைத்து மேலும் கடனாளியாக்கும். வங்கிகள் சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் செயல்பட வேண்டும். ஆர்.பி.ஐ இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன்.” என்றார்.
சாமானிய மக்களை காப்பாற்றுவது மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் கடமை.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
