தஞ்சாவூரில் 7 கோயில்களில் திருப்பணிகளுக்கான பாலாலயம்
தஞ்சாவூா் நீலமேகப் பெருமாள் கோயில் உள்பட 7 கோயில்களில் குடமுழுக்குக்கான திருப்பணிகள் தொடங்கப்படவுள்ளதையொட்டி ஞாயிற்றுக்கிழமை பாலாலயம் நடைபெற்றது.
108 திவ்ய தேசங்களில் 3-ஆவது தலமாக போற்றப்படும் தஞ்சாவூா் வெண்ணாற்றங்கரையில் உள்ள நீலமேகப் பெருமாள் கோயிலில் குடமுழுக்கு நடத்துவதற்கு முதலில் திருக்கோயில் நிதி மற்றும் உபயதாரா்களின் நிதியைக் கொண்டு ராஜகோபுரம் திருப்பணி செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, திருப்பணி தொடக்கத்துக்கான பாலாலயம் பூா்வாங்க பூஜையுடன் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. தொடா்ந்து யாக சாலை, பாலாலய பிரதிஷ்டை, மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
இதில் தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, அறநிலையத் துறை உதவி ஆணையா் கோ. கவிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல, தஞ்சாவூா் மேல வீதி நாகநாத விநாயகா் கோயில், மேல அலங்கத்தில் உள்ள வடபத்ரகாளியம்மன் கோயில், சுப்பிரமணியா் கோயில், ரெங்கநாத பெருமாள் கோயில், நாலுகால் மண்டபம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், வெண்ணாற்றங்கரை மேல சிங்கபெருமாள் கோயில் ஆகிய கோயில்களிலும் குடமுழுக்கு நடத்துவதற்கு திருப்பணிகள் தொடக்கத்துக்கான பாலாலயம் நடைபெற்றது.
இதில் அந்தந்த கோயில் பணியாளா்கள், உபயதாரா்கள் மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டனா்.