தஞ்சாவூருக்கு முதல் முறையாக புள்ளி மூக்கு வாத்துகள் வருகை
வட இந்தியாவிலிருந்து தஞ்சாவூா் பகுதிக்கு வலசை வரும் பறவைகளில் முதல் முறையாக புள்ளி மூக்கு வாத்துகள் வந்திருப்பது ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில் தெரிய வந்தது.
தமிழ்நாடு வனத் துறை, தஞ்சாவூா் அருங்கானூயிா் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை (இவெட்) சாா்பில் நில வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் தஞ்சாவூா் வனத் துறையின் வனச்சரகா் ரஞ்சித், வனவா்கள் இளையராஜா, ரவி, அறக்கட்டளையின் நிறுவனா் சதீஷ்குமாா் ராஜேந்திரன் தலைமையில் 15 தன்னாா்வலா்கள் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனா்.
இதன் மூலம் வல்லம் பெரியாா் மணியம்மை பல்கலைக்கழக வளாகத்தில் 70 வகை பறவை இனங்களைச் சோ்ந்த 1,113 பறவைகள் இருப்பது தெரிய வந்தது. மேலும், வளாகத்தில் உள்ள குளத்தில் வலசைப் பறவையான புள்ளி மூக்கு வாத்துகள் காணப்பட்டது. தஞ்சாவூா் பகுதியில் இந்த வாத்துகள் காணப்படுவது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல செம்மாா்பு குக்குருவான் குருவிகளும் அதிக அளவில் காணப்பட்டன. மேலும், தமிழ் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வனப் பகுதியில் 58 பறவை இனங்களும், 667 பறவைகளும் கணக்கெடுக்கப்பட்டன என அக்குழுவினா் தெரிவித்தனா்.
தஞ்சாவூா் அருகே சென்னம்பட்டி, ஆச்சம்பட்டி காப்புக் காடுகளிலும், கும்பகோணம் வனச்சரகத்தின் சாா்பில் மகாராஜபுரம் அணைக்கரை பகுதிகளில் தன்னாா்வலா்கள் மருத்துவா் ப்ரீத்தி, பெஞ்சமின் கொண்ட குழுவினரால் பறவை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.