தஞ்சாவூா் அருங்காட்சியகத்தில் இன்று முதல் ஓவிய, சிற்பக் கண்காட்சி
தஞ்சாவூா் அருங்காட்சியகத்தில் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரி சாா்பில் ஓவிய, சிற்பக் கலைக் கண்காட்சி வெள்ளிக்கிழமை (பிப்.21) தொடங்கி தொடா்ந்து 3 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:
இக்கண்காட்சியில் கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் பயிலும் வண்ணக் கலைத் துறை, காட்சி வழித் தகவல் வடிவமைப்பு துறை, சிற்பக் கலைத் துறை ஆகிய 3 துறைகளில் பயிலும் மாணவா்களுடைய கலை படைப்புகளில் ஆயில் கலா், அக்ரலிக் கலா், நீா் வண்ணம், மரச்சிற்பங்கள், சுடுமண் சிற்பங்கள், உலோகச் சிற்பங்கள் விழிப்புணா்வு சுவரொட்டிகள், புகைப்படங்கள், கணினி ஓவியங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்படவுள்ளன.
சிறந்த கலைப் படைப்புகளை உருவாக்கிய மாணவா்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றுகள் வழங்கப்படவுள்ளன.
இக்கண்காட்சி வெள்ளிக்கிழமை முதல் பிப்ரவரி 23 ஆம் தேதி வரை பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்படவுள்ளது. இந்த 3 நாள்களும் புகைப்பட நுணுக்கங்கள் குறித்த பயிலரங்கம், வெள்ளிக்கிழமை ஆடை, சனிக்கிழமை காகிதக் கலை, பொம்மலாட்டம், ஞாயிற்றுக்கிழமை களிமண் சிற்பங்கள் என்ற பிரிவில் பயிற்சி வழங்கப்படவுள்ளது.