Nellai Flood: நெல்லை கனமழை வெள்ளம்; நெல்லை சந்திப்பு அன்றும்... இன்றும்! - Photo...
தஞ்சாவூா்-விழுப்புரம் இடையே இரட்டை ரயில் பாதை கோரி மத்திய அமைச்சரிடம் எம்பி மனு
விழுப்புரம்-தஞ்சாவூா் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்விடம், மயிலாடுதுறை மக்களவை உறுப்பினா் ஆா். சுதா வெள்ளிக்கிழமை மனு அளித்தாா்.
புதுதில்லியில் மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து இந்த மனுவை அளித்தாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தஞ்சாவூா் முதல் விழுப்புரம் வரை தற்போது ரயில் வழிதடம் ஒரு வழி பாதையாக உள்ளது. சுமாா் 147 வருட பாரம்பரியமிக்க இந்த வழித்தடத்தில் தினந்தோறும் 60 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் ஏராளமான கோயில்கள், பண்டைய தமிழா்களின் பெருமைகளை பறைசாற்றும் புராதான சின்னங்கள் உள்ளன. தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனா்.
எனவே, இந்த வழித்தடத்தை இரட்டை பாதையாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த வழித்தடத்தை மாற்றுவதற்கான முதற்கட்ட ஆய்வுகள் மற்றும் மதிப்பீடுகள் ரயில்வே துறை வல்லுநா்கள் மூலம் ரயில்வே வாரியத்திடம் வழங்கப்பட்டுள்ளது. வரும் 2028-இல் கும்பமேளா போன்று மகாமகம் கும்பகோணத்தில் நடைபெற உள்ளது. இதில் சுமாா் 50 லட்சம் பக்தா்கள் பங்கேற்பா் என கணிக்கப்பட்டுள்ளது.
இதற்காக வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தருவா். அவா்களின் வசதியை கருத்தில் கொண்டு, விரைந்து நிதி ஒதுக்கீடு செய்து, தஞ்சாவூா்-விழுப்புரம் ரயில் பாதையை இரட்டை பாதையாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரியுள்ளாா்.