தஞ்சை அரசு மருத்துவமனை தீ விபத்து: ”உயிரைப் பணயம் வச்சு காப்பாத்தினோம்; ஆனா..”- கொதிக்கும் ஊழியர்கள்
தஞ்சாவூர் இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் கடந்த 24-ம் தேதி மகப்பேறு சிகிச்சைப் பிரிவு வார்டில் ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் வார்டு முழுவதும் புகை சூழ்ந்தது.
வார்டில் குழந்தை பெற்ற பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் காத்திருந்த, சிகிச்சையிலிருந்தவர்களின் உறவினர்கள் அச்சமடைந்தனர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் பணியிலிருந்த தற்காலிகப் பணியாளர்களான தூய்மைப் பணியாளர்கள், பாதுகாவலர்கள், உதவியாளர்கள், செவிலிய பயிற்சி மாணவிகள் ஆகியோர் சிகிச்சையிலிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பத்திரமாகக் காப்பாற்றினர்.
தங்கள் உயிரைப் பணயம் வைத்து அவர்கள் செய்த இந்த செயலால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதையடுத்து தீ விபத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், "விபத்தில் உயிர்ச் சேதமும் இல்லை, யாருக்கும் காயமும் இல்லை. யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தீயை அணைக்க முயன்ற மருத்துவமனை பணியாளர்கள் 2 பேருக்கு மட்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர்களுக்கும் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் உள்ளனர்" எனப் பேட்டி கொடுத்தார்.
ஆனால் வார்டில் இருந்தவர்களைக் காப்பாற்றிய தற்காலிகப் பணியாளர்கள் சுமார் 40 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதால் இதை வெளியே தெரியாமல் மாவட்ட நிர்வாகம் மறைத்து விட்டதாகச் சொல்கிறார்கள்.
இந்த நிலையில், பல உயிர்களைக் காப்பாற்றிய பணியாளர்களைப் பாராட்டி வாழ்த்துவதற்குப் பதிலாக மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறது மாவட்ட நிர்வாகம்.
மேலும் மீடியாக்களுக்கு செய்தி தெரிந்ததும் சிகிச்சையில் இருந்தவர்களை உடனடியாக கட்டாய டிஸ்ஜார்ஜ் செய்து அனுப்பியுள்ளனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
இது குறித்து சிகிச்சையிலிருந்த பணியாளர்கள் சிலர் கூறுகையில், "இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுப் புகை எங்கும் பரவியது. நாங்கள் கொஞ்சம் கூட எங்களைப் பற்றி யோசிக்காமல் மாடியிலிருந்து வீல் சேரில் பெண்களை உட்கார வைத்துத் தள்ளிக் கொண்டு தரைப்பகுதிக்குப் பாதுகாப்பாகக் கொண்டு வந்து விட்டோம்.
அதே போல் குழந்தைகளையும் பாதுகாப்பாக மீட்டோம். கிட்டதட்ட 30 தாய்மார்கள், 24 குழந்தைகள் என 54 நான்கு பேரை மீட்டோம்.

எந்த உயிரும் போய்விடக்கூடாது என்பதற்காக எங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் இந்த செயலைச் செய்தோம். இதில் புகையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆண்கள் மற்றும் பெண்கள் என 40 பேர் பாதிக்கப்பட்டோம்.
எங்களை உடனடியாக மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போதே மாவட்ட ஆட்சியர், இரண்டு பணியாளர்கள் மட்டும் பாதிக்கப்பட்டதாகவும் அவர்களும் நலமுடன் இருப்பதாகவும் பேட்டி கொடுத்தார்.
இதை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அதன் பிறகு நாங்கள் சிகிச்சையில் இருப்பதையே வெளியில் தெரியாமல் மறைத்தனர். குறிப்பாக மீடியாவுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டனர்.
உயிர்ப் பலி எதுவும் ஏற்படாமல் பெரிய அசம்பாவிதத்தைத் தவிர்த்த எங்களை மாவட்ட ஆட்சியர் வந்து பார்க்கவில்லை. நாங்கள் செய்த வீர தீர செயலைப் பொறுப்பு அமைச்சர் கோவி.செழியன் கவனத்துக்கும் கொண்டு செல்லவில்லை.

இதற்கிடையே, உங்களுக்கு உடம்பு நல்லாத்தான் இருக்கு, நிவாரணம் எதுவும் குடுப்பாங்கனு இங்க படுத்து கிடக்குறீங்களானு டாக்டர்கள் சிலர் எங்கள் காதுபடவே பேசினார்கள். பாராட்டி வாழ்த்த வேண்டிய எங்களை வேதனைக்கு ஆளாக்கினர்.
சமூக ஆர்வலர்கள் மற்றும் மீடியா ஆட்களுக்கு இந்த தகவல் தெரிந்து வார்டுக்கு வந்தனர். இதனால் திடீரென நிர்வாகம் எங்களைத் திடீரென டிஸ்ஜார்ஜ் செய்து விட்டது.
புகையினால் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் ரிசல்ட் வந்த பிறகு டிஸ்ஜார்ஜ் என்றவர்கள் அவசரமாக வீட்டுக்கு அனுப்பியது ஏன்" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது குறித்து சி.பி.எம் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கண்ணன் கூறுகையில், "களத்தில் தங்கள் உயிரைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் அசாதாரணமான அந்தச் சூழலில் பம்பரமாகச் சுழன்று பல உயிர்களைக் காப்பாற்றினர். அந்த பணியாளர்கள் இல்லை என்றால் அரசு பெரிய அவப்பெயரைச் சந்தித்து இருக்கும்.

குறைந்தபட்சம் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்துப் பாராட்டியிருக்க வேண்டும்.
இந்தச் செயலை முதல்வர் கவனத்துக்கு எடுத்துச் சென்று வாழ்த்தச் செய்து அவர்களுக்கான மரியாதையைப் பெற்றுத் தந்திருக்க வேண்டும். மாறாக 40 பேர் பாதிக்கப்பட்டதையும், சிகிச்சையில் இருப்பதையும் மறைத்திருக்கிறார்.
புகையினால் பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்காமல் வேதனைக்குள்ளாகி டிஸ்ஜார்ஜ் செய்துள்ளனர். இதற்கு உரியப் பதிலை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் சொல்ல வேண்டும்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY