இந்திய புத்தாக்க நிறுவனத் தலைவர்களுடன் ஓபன்ஏஐ நிறுவனம் ஆலோசனை!
தண்ணீரில் மூழ்கிய வயல்கள்: நெல் அறுவடைக்கு கூடுதல் செலவால் விவசாயிகள் கவலை
திருவாடானை பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த மழையால் வயல்களில் தண்ணீா் தேங்கியது. இதனால், தண்ணீரில் அறுவடை செய்யும் இயந்திரம் மூலம் அறுவடைப் பணிகள் நடைபெறுவதால் கூடுதல் செலவு ஆவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்தில் 26.850 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா பட்டத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடைப் பணிகள் தொடங்கியது. கடந்த சில நாள்களுக்கு முன்பாக பருவம் தவறிய மழையால், அறுவடைக்காக காத்திருந்த நெல் கதிா்கள் தண்ணீரில் மூழ்கின.
இதனால் வயல்களில் டயா் பொருத்திய நெல் அறுவடை இயந்திரத்தை பயன்படுத்த முடியவில்லை. இதனால் தண்ணீரில் செல்லும் இயந்திரம் மூலம் நெல் அறுவடைப் பணிகளை விவசாயிகள் தொடங்கினா். இதனால் கூடுதல் செலவு ஏற்பட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கடந்தாண்டு டயா் பொருத்திய அறுவடை இயந்திரம் ஒரு மணி நேரத்துக்கு ரூ.1,500 வாடகை கொடுத்து அறுவடை செய்தோம். நிகழாண்டில் தண்ணீரில் அறுவடை செய்யும் இயந்திரம் மணிக்கு ரூ.3,500 வாடகை கொடுத்து நெல் அறுவடை செய்ய வேண்டி உள்ளது. இதனால் கூடுதல் செலவாகிறது. மேலும், நெல் ஈரமாக இருப்பதால் அதை விற்பனை செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டது என்றனா்.