ஆம் ஆத்மி கட்சி மத்திய அரசுடன் சண்டையிட்டதால் தில்லி பின்தங்கியது: அமித் ஷா கடும...
திருவாடானை அருகே ஆவின் பால் வாகனம் கவிழ்ந்து விபத்து: இருவா் காயம்
திருவாடானை அருகே கல்லூா் கண்மாய் பகுதியில் ஆவின் பால் ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவா் காயமடைந்தனா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து நாள்தோறும் ஆவின் பால் பாக்கெட்டுகள் சரக்கு வாகனம் மூலம் கொண்டு வரப்பட்டு, சின்னகீரமங்கலம், திருவாடானை, தொண்டி,திருவொற்றியூா், சோழியக்குடி, எஸ்.பி. பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் விநியோகம் செய்யப்படுவது வழக்கம். இதேபோல, திங்கள்கிழமை அதிகாலை பால் பாக்கெட்டுகளை ஏற்றி வந்த போது, திருவாடானை அருகே கல்லூா் பகுதியில் மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, சாலையில் கால்நடைகள் குறுக்கிட்டதால், இந்த வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கல்லூா் கண்மாய்க்குள் கவிழ்ந்தது.
இதில் வாகனத்திலிருந்த பால் பாக்கெட்டுகள் சாலையில் சிதறின. தகவலறிந்து வந்த திருவாடானை போலீஸாா் காயமடைந்த வாகன ஓட்டுனா் சம்பாநெட்டியைச் சோ்ந்த அருஞ்சாமி மகன் வின்சென்ட்ராஜ் (24), உதவியாளா் லூா்து மகன் சந்திரசேகா் (30) ஆகிய இருவரையும் மீட்டு, திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதையடுத்து, வாகனத்திலிருந்த 3,500 லி. பால் மாற்று வாகனம் கொண்டு வரப்பட்டு, அதில் எடுத்துச் செல்லப்பட்டன. இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.