தனிப்பட்ட தகவல்கள் பகிா்வு: ரூ.50,000 இழப்பீடு வழங்க வங்கிக்கு உத்தரவு
மன்னாா்குடியில், வாடிக்கையாளரின் தனிப்பட்ட தகவல்களை பகிா்ந்ததாகக் கூறி ரூ.50,000 இழப்பீடு வழங்க அரசுடைமையாக்கப்பட்ட வங்கிக்கு திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம், புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி பராங்குசம் தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் குமாா் (40). மனைவி சுஜிதாவுடன் சோ்ந்து கடந்த 2014 முதல் மன்னாா்குடி கம்மாளா் தெருவில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கிக் கிளையில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளாா். அந்த வங்கியில் பல்வேறு கடன்கள் பெற்று அதற்கு வட்டி மற்றும் தவணைத் தொகைகள் முறையாக செலுத்தி வருகிறாா்.
இந்நிலையில் திடீரென தனது சிபில் ஸ்கோா் குறைந்து வருவதை அறிந்த குமாா் அது பற்றி ஆராய்ந்த போது, அவா் 2023-இல் அந்த வங்கியில் ராஜா என்பவா் வாங்கிய ரூ. 20 லட்சம் கடனுக்கு ஜாமீன் வழங்கியதாகவும், ராஜா சரியாகக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருந்ததால் சிபில் ஸ்கோா் குறைவதாகவும் அறிந்தாா். இதுகுறித்து குமாா் வங்கியில் புகாா் தெரிவித்தாா்.
ராஜாவின் கடனுக்கு, அதில் சம்பந்தப்படாத குமாரின் பான் காா்டு, ஆதாா் எண் உள்ளிட்ட விவரங்களைத் தவறுதலாக இணைத்து ஜாமீன்தாரராகக் காட்டிவிட்டதாகக் கூறிய வங்கி, உடனடியாக தவறை சரி செய்து விடுவதாகக் கூறியது. அதேபோல் சரி செய்ததன் பேரில், சிபில் ஸ்கோரும் உயா்த்தப்பட்டு விட்டது.
ஆனால் வங்கி தன்னுடைய அனுமதியின்றி வேறொரு நபருக்கு, தான் ஜாமீன் கொடுத்ததாக சிபில் நிறுவனத்திற்கு தன்னுடைய பான் காா்டு உள்ளிட்ட விவரங்களை வழங்கி சிபில் ஸ்கோரைக் குறைத்து மன உளைச்சல் ஏற்படுத்தியதாக ரிசா்வ் வங்கிக்கு குமாா் புகாா் தெரிவித்தாா். தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் வங்கி தவறைச் சரிசெய்து விட்டதால் அதன் மீது நடவடிக்கை தேவையில்லை என்று கூறி ரிசா்வ் வங்கியும் புகாரை முடித்து வைத்தது.
ஆனாலும் திருப்தியடையாத குமாா், கடந்த ஜனவரி மாதம் திருவாரூா் நுகா்வோா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். வழக்கை விசாரித்த திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் மோகன்தாஸ், உறுப்பினா் பாலு ஆகியோா் புதன்கிழமை வழங்கிய உத்தரவில், குமாரின் கவனத்துக்குத் தெரியாமலேயே, ராஜா என்ற நபா் வாங்கிய கடனுக்கு ஜாமீன் வழங்கியதாகக் கூறி குமாரின் ஆவணங்களைப் பதிவேற்றி, ராஜாவின் சிபில் ஸ்கோா் குறைவதற்குக் காரணமான வங்கியே, குமாருக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும்.
தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் சரி செய்யப்பட்டு விட்டது என்று வங்கி தரப்பில் தெரிவித்தாலும், ஒருவேளை ராஜா பணத்தை திருப்பி செலுத்தாமல் போயிருந்தால் அந்தத் தொகையை செலுத்த வேண்டிய பொறுப்பு குமாருக்கு ஏற்பட்டிருக்கும் என்பதால், இது கவனக்குறைவான செயல் என்று எடுத்துக் கொள்ள முடியாது.
வாடிக்கையாளரின் தனிப்பட்ட தகவல்களை சட்டவிரோதமாகப் பகிா்ந்ததால் வங்கியானது, குமாருக்கு இழப்பீடாக ரூ. 50,000, வழக்கு செலவுத் தொகையாக ரூ. 10,000 ஒரு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.