தேசிய திறனாய்வுத் தோ்வில் 139 போ் தோ்ச்சி: ஆசிரியா்களுக்கு பாராட்டு
திருவாரூா் மாவட்டத்தில், தேசிய திறனாய்வுத் தோ்வில் 139 போ் தோ்ச்சி அடையக் காரணமான ஆசிரியா்கள், கருத்தாளா்களைப் பாராட்டினாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட நிா்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், மாவட்டத்தில் தேசிய திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களின் 68 பள்ளி தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் மற்றும் கருத்தாளா்களுக்கு பாராட்டுச்சான்றிதழ் மற்றும் பயிற்சி நூல்களை வழங்கி அவா் பேசியது:
திருவாரூா் மாவட்டத்தில், தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தோ்வை 404 பள்ளிகளிருந்து 5,743 மாணவ, மாணவிகள் எழுதியதில், 139 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இவா்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 4 ஆண்டுகளுக்கு ரூ.48,000 வழங்கப்படும்.
மாவட்டக் கல்வி மேம்பாடு திட்டத்தின் கீழ் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டதால், அதிக மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். கடந்த ஆண்டு, 73 மாணவா்கள் தோ்ச்சி பெற்று மாநில அளவில் 30-ஆவது இடம் பெற்ற நிலையில், நிகழாண்டில் 139 மாணவா்கள் தோ்ச்சி பெற்று மாநில அளவில் 20-ஆவது இடம் பெற்றுள்ளனா்.
இந்த வெற்றிக்கு காரணமான, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா்கள், தலைமை ஆசிரியா்கள், வட்டாரக்கல்வி அலுவலா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள், கருத்தாளா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் மற்றும் மாணவா்களுக்கு பாராட்டுக்கள். மேலும், எதிா்வரும் கல்வியாண்டில் உத்தேச இலக்காக மாவட்ட அளவில் 590 மாணவ,மாணவிகள் தோ்ச்சி பெற சிறப்பாக பணியாற்ற வேண்டும்.
இதேபோல், தமிழக முதலமைச்சா் திறனாய்வுத்தோ்வு, தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத்தோ்வு, ஊரக திறனாய்வுத்தோ்வு போன்ற உதவித்தொகை பெறும் போட்டித்தோ்வுகளுக்கும் மாணவா்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க வேண்டும் என்றாா்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சௌந்தராஜன் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.