தனியார் நிறுவனங்களை வீழ்த்தி புதிய வாடிக்கையாளர்களைப் பெற்ற பிஎஸ்என்எல்
புது தில்லி: தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தியபோது, அரசுப் பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல், கட்டணக் குறைப்பை அறிவித்து, கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் புதிதாக 8 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து மூன்றாவது மாதமாக புதிதாக வாடிக்கையாளர்களைப் பெற்று வருகிறது. இதன் மூலம் இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 9 கோடியே 18 லட்சமாக உயர்ந்துள்ளது. பங்குச் சந்தையிலும் இதன் மதிப்பு 7.98 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 25 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றிருந்த பிஎஸ்என்எல் நிறுவனம், ஜூலை மாதத்தில் 29 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றிருந்தது.
அதேவேளையில், ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடவோன் ஐடியா நிறுவனங்கள், கடந்த ஜூன் மாதம் கட்டண உயர்வை அறிவித்ததிலிருந்து வாடிக்கையாளர்களை இழந்துகொண்டிருக்கிறது. இந்த மூன்று நிறுவனங்களும் கடந்த ஜூன் மாதம் கட்டண உயர்வை அறிவித்தன. ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வந்த கட்டண உயர்வானது 25 சதவீத அளவுக்கு இருந்தது, சாதாரண மக்களை மிகவும் பாதித்திருந்தது.